பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா பழங்குடியினர்களை அவமதிக்கும் வகையில் பேசியதை அடுத்து அவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். ஹைதராபாதில் பட ரிலீஸுக்கு முன்பு நடந்த இந்த விழாவில் சூர்யா மேடையில் இருக்க நடிகர் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் முன் பேசினார். அப்போது பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் அவர் கருத்து தெரிவித்தது தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் குறித்து பேச்சு:
அந்த விழாவில் அவர் பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து பேசும்போது, ”காஷ்மீர் மக்கள் நம்மை போன்றவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன், குஷி பட சூட்டிங்காக காஷ்மீர் சென்று இருந்தேன்..மிகவும் நன்றாக பழகினார்கள். பாகிஸ்தானால் சொந்த நாட்டு மக்களை கூட கவனிக்க முடியவில்லை. அவர்கள் நம் நாட்டில் தாக்குதல் நடத்துகிறார்கள். இது தொடர்ந்தால் பாகிஸ்தான் மக்களே வெறுப்படைந்து தங்கள் அரசை தாக்கி விடுவார்கள். பாகிஸ்தான் குறைந்தபட்ச பொது அறிவு இல்லாமல் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழங்குடியினர் போல நடந்துக்கொள்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்'' என்று பேசி இருந்தார். பழங்குடியினர்களை இழிவுப்படுத்து வகையில் அவர் தெரிவித்த இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வழக்குப்பதிவு:
இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள காவல் நிலையங்களில் விஜய் தேவரகொண்டா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா மீது எஸ் சி எஸ் டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மன்னிப்பு கோரினார்:
மேலும் இந்த சர்ச்சையை அடுத்து நடிகர் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் மன்னிப்பு பதிவு வெளியிட்டுள்ளார்.
ரெட்ரோ ஆடியோ வெளியீட்டு விழாவின் போது நான் கூறிய ஒரு கருத்து பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியது என் கவனத்திற்கு வந்துள்ளது. நான் உண்மையாகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: எந்தவொரு சமூகத்தையும், குறிப்பாக , நான் ஆழமாக மதிக்கும் மற்றும் நமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதும் பழங்குடியினரை புண்படுத்தவோ அல்லது குறிவைக்கவோ எந்த நோக்கமும் இல்லை.
நான் ஒற்றுமை பற்றி பேசினேன் - இந்தியா எப்படி ஒன்று, நம் மக்கள் ஒன்று, நாம் எப்படி ஒன்றாக முன்னேற வேண்டும் என்பது பற்றி. இந்த உலகத்தில், ஒரு நாடாக ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தும் அதே வேளையில், அவர்கள் அனைவரையும் எனது குடும்பமாக, என் சகோதரர்களைப் போல பார்க்கிறேன்.
"பழங்குடி" என்ற வார்த்தை, நான் பயன்படுத்தியது போல், வரலாற்று மற்றும் அகராதி அர்த்தத்தில் - பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மனித சமூகம் உலகளவில் பழங்குடிகள் மற்றும் குலங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட காலத்தைக் குறிக்கிறது, பெரும்பாலும் மோதலில். காலனித்துவ மற்றும் பிந்தைய காலனித்துவ இந்தியாவின் போது அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மட்டுமே முறைப்படுத்தப்பட்ட - 100 ஆண்டுகளுக்கு முன்பு கூட இது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வகைப்பாட்டைக் குறிக்கவில்லை.
ஆங்கில அகராதியின்படி, "பழங்குடி" என்பதன் பொருள்: "ஒரு பொதுவான கலாச்சாரம் மற்றும் பேச்சுவழக்கு கொண்ட சமூக, பொருளாதார, மத அல்லது இரத்த உறவுகளால் இணைக்கப்பட்ட குடும்பங்கள் அல்லது சமூகங்களைக் கொண்ட ஒரு பாரம்பரிய சமுதாயத்தில் ஒரு சமூகப் பிரிவு."
நான் பேசியதில் ஏதேனும் ஒரு பகுதி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டாலோ அல்லது புண்படுத்தும் வகையில் இருந்தாலோ, எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமை பற்றி பேசுவதே எனது ஒரே நோக்கம். எனது தளத்தை மேம்படுத்தவும் ஒன்றிணைக்கவும் பயன்படுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன் - ஒருபோதும் பிரிக்க மாட்டேன். என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.