ப்ளூ சட்டை மாறன் போன்றவர்கள் சொல்வதைக் கேட்டு ரோமியோ போன்ற ஒரு நல்ல படத்தைக் கொண்டாடாமல் போன அறிவுஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.


ரோமியோ


விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி , மிர்ணாலினி நடித்துள்ள படம் ரோமியோ. இப்படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியானது. பரத் தனசேகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


35 வயதாகியும் லவ் ஃபீல் வந்தால் தான் திருமணம் செய்வேன் என அடம்பிடிக்கும் விஜய் ஆண்டனிக்கும், மிருளாணி ரவிக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால் இந்த திருமணம் மிருளாளினி விருப்பம் இல்லாமல் நடந்ததை உணர்ந்து கொள்ளும் விஜய் ஆண்டனிக்கு, அவர் வாழும் நகரத்து வாழ்க்கை மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் தான், விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தது தவறு என்றும், விவாகரத்து செய்து கொள்ளலாம் எனவும் மிருளாளினி கூறுகிறார்.


மனைவியின் எண்ணத்தை புரிந்து கொள்ளும் விஜய் ஆண்டனி, தன்னை மிருளாளினிக்கு பிடித்த மாதிரி மாற்ற என்னவெல்லாம் செய்கிறார் என்பதை ரொமான்டிக் காமெடி கலந்து ரோமியோ-வாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விநாயகர் வைத்தியநாதன்.


ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்


ரோமியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இப்படத்தின் கதை இந்தி படம்  'Rab Ne Bana Di Jodi' படத்தின் கதையைப் போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியது. மேலும் சினிமா ஆர்வலரான ப்ளூ சட்டை மாறன் இப்படத்தையும் விஜய் ஆண்டனியின் நடிப்பையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். படத்தின் மையக் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் தேவையில்லாத கதாபாத்திரங்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் இப்படத்தில் விஜய் ஆண்டி வில்லன் , நாயகி , அம்மா என யாரிடம் பேசினாலும் ஒரே மாதிரி தான் பேசியிருக்கிறார். ஒரு ரொமாண்டிக் படத்தில் நாயகியும் நாயகனும் சேர வேண்டும் என்றுதான் நமக்கு ஆசை வரும். ஆனால் இந்தப் படத்தில் இருவரும் சேர வேண்டும் என்கிற ஆசையே நமக்கு வருவதில்லை. அந்த அளவிற்கு விஜய் ஆண்டனியின் நடிப்பு சுமாரானதாக இருந்ததாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருந்தார்.


ஆழ்ந்த அனுதாபங்கள் ப்ளூ சட்டை மாறன்






ரோமியோ படத்திற்கு வெளியான நெகட்டிவ் விமர்சனங்கள் அப்படத்திற்கான ரசிகர்களின் வருகையை பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து கொல்லும் ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கு ,


இவர்கள் சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவுஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க" என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.