நடிகர் விஜய்யின் வாரிசு படமும், நடிகர் அஜித்தின் துணிவு படமும் நாளை வெளியாகவுள்ள நிலையில் இதுவரை இவ்விரு நடிகர்களின் படங்களும் நேருக்கு நேர் மோதிய வரலாறு குறித்து காணலாம். 


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக அமைந்துள்ளது என சொல்லலாம். காரணம் 8 ஆண்டுகளுக்குப் பின் விஜய், அஜித் படங்கள் நேரடியாக களமிறங்குவதால் எந்த படம் ஹிட்டாக போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 


இதனிடையே விஜய் - அஜித் படங்கள் 1996ல் இருந்து இதுவரை 12 முறை நேருக்கு நேர் தங்கள் படங்களை ரிலீஸ் செய்துள்ளனர்.


கோயம்புத்தூர் மாப்பிள்ளை vs வான்மதி


1996 ஆம் ஆண்டு முதல் முறையாக  விஜய் படமும் அஜித் படமும் பொங்கல் பண்டிகையின்போது நேருக்கு நேர் ரிலீசாகியது. விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படம் ஜனவரி 15ஆம் தேதியும், அஜித் நடித்த வான்மதி படம் ஜனவரி 12 ஆம் தேதியும் ரிலீசானது. இந்த இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய ஹிட் அடித்தது. இதில் அஜித்தின் வான்மதி படம் மட்டும் திரையரங்குகளில் 150 நாட்களைக் கடந்து அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. 


பூவே உனக்காக vs கல்லூரி வாசல்


1996 ஆம் ஆண்டு அடுத்த ஒரு மாதத்திலேயே விஜய்-அஜித்தின் அடுத்த படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யப்பட்டன. பிப்ரவரி 15 ஆம் தேதி விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த பூவே உனக்காக படமும், அஜித் நடித்த கல்லூரி வாசல் பிப்ரவரி 18 ஆம் தேதியும் வெளியானது. ஆனால் கல்லூரி வாசல் திரைப்படத்தில் பிரசாந்த் தான் முதன்மை ஹீரோவாக நடித்திருந்தார். கல்லூரி வாசல் திரைப்படம் ரசிகர்களை கவர தவறியது.


காலமெல்லாம் காத்திருப்பேன் vs  நேசம் 


1997 ஆம் ஆண்டில் பொங்கலையொட்டி, விஜய்யின் காலமெல்லாம் காத்திருப்பேன் திரைப்படமும், அஜித்தின் நேசம் திரைப்படமும்  வெளியானது. இந்த இரண்டு படங்களுமே மக்களிடமிருந்த சுமார் என்ற விமர்சனத்தைத்தான் பெற்றது. 


காதலுக்கு மரியாதை vs இரட்டை ஜடை வயது 


1997ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி அஜித்தின் இரட்டை ஜடை வயது என்ற படம் வெளியானது. அதற்கு ஒரு வாரம் கழித்து விஜய்யின் காதலுக்கு மரியாதை படம் ரிலீஸானது. இரட்டை ஜடை வயது நல்ல விமர்சனம் பெற்றாலும், விஜய்யின் காதலுக்கு மரியாதை படம் மிகப்பெரிய ஹிட் ஆகி விஜய் பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தார். படமும் விஜய்யின் கேரியரில் முக்கிய படமாக அமைந்தது.


துள்ளாத மனமும் துள்ளும் vs உன்னைத்தேடி


1999 ஆம் ஆண்டு விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படம் ஜனவரி 29அன்று வெளியாக, அஜித்தின் உன்னைத்தேடி படம் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியானது. இதில் துள்ளாத மனமும் துள்ளும் படமே வெற்றிப்பெற்றது. அஜித்தின் உன்னைத்தேடி படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டுகளை பெற்றிருந்தது. 


குஷி vs உன்னைக் கொடு என்னைத் தருவேன்


2000 ஆம் ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்து, விஜய்க்கு குஷி படமும்,  அஜித்தின் உன்னைக்கொடு என்னை தருவேன் படம் மே 19 ஆம் தேதி ஒன்றாக வெளியானது. இதில் குஷி படம் மெஹா ஹிட் படமானது. அஜித்தின் உன்னைக்கொடு என்னைத் தருவேன் படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து தோல்வியைத் தழுவியது. 


தீனா vs ஃப்ரண்ட்ஸ்


அஜித்தின் தீனா படமும், விஜய் நடித்த ஃப்ரண்ட்ஸ் படமும் 2001 பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகின. இதில் இரண்டு படங்களுமே வெற்றிப்பெற்றன. தீனா படத்திற்கு பின் அஜித் தனது ரசிகர்களால் ‘தல’ என்றழைக்கப்பட்டார். 


பகவதி vs வில்லன் 


2002 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளிக்கு விஜய், ரீமாசென் நடிப்பில் ஏ. வெங்கடேஷ் இயக்கிய பகவதி படம் வெளியானது. அதேசமயம் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வில்லன் படமும் வெளியாகியிருந்தது. இதில் வில்லன் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பகவதி படம் சுமாரான வெற்றியை பெற்றது. ஆனால் அப்படம் விஜய் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுவதற்கு அடித்தளமாக அமைந்தது. 


திருமலை vs ஆஞ்சநேயா


2003 ஆம் ஆண்டில் விஜய்யின் திருமலை படமும் அஜித்தின் ஆஞ்சநேயா திரைப்படமும் தீபாவளியன்று வெளியானது. இதில், திருமலை படமே வெற்றிப்பெற்ற நிலையில், ஆஞ்சநேயா படம் படுதோல்வியடைந்தது. 


ஆதி vs பரமசிவன்


அடுத்த 2 ஆண்டுகளாக விஜய்-அஜித் படம் நேருக்கு நேர் களமிறங்கவில்லை. தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு விஜய்க்கு ஆதி படமும், அஜித்துக்கு பரமசிவன் படமும் பொங்கலையொட்டி வெளியானது. இதில் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களுடன் தோல்வியை தழுவியது. 


போக்கிரி vs ஆழ்வார்


2007ஆம் ஆண்டில் விஜய்யின் போக்கிரி படமும் அஜித்தின் ஆழ்வார் படமும் வெளியானது. இதில் போக்கிரி படம் 100 நாட்களை கடந்து சூப்பர் ஹிட்டானது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  ஆழ்வார் திரைப்படம் மண்ணைக் கவ்வியது.


ஜில்லா vs  வீரம் 


வர்த்தக ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டு  7 ஆண்டுகளாக  அஜித்-விஜய்யின் திரைப்படங்கள் ஒன்றாக வெளியிடப்படாமல் இருந்தது.  2014 ஆம் ஆண்டு விஜய் நடித்திருந்த ஜில்லா படம் பொங்கலையொட்டி ஜனவரி 10ஆம் தேதி வெளியாக, அஜித்தின் வீரம் படமும் அதே தேதியில் வெளியானது. இதில், வீரம் படம் பெரும் வெற்றிப்பெற்றது. அதே சமயத்தில் ஜில்லா திரைப்படம் மிக நீளமாக இருந்தது பட தோல்விக்கான காரணமாக கூறப்பட்டது. 


தற்போது 13 வது முறையாக வாரிசு - துணிவு ஆகிய படங்கள் நேரடியாக களமிறங்கவுள்ள நிலையில், இதுவரை நடந்த மோதல்களில் பெரும்பாலும் விஜய் படங்களே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் எப்போதும் வெற்றி என்பது மாறி மாறி தான் வரும் என்பதால் இம்முறை வெற்றிப் பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.