வருமான ரீதியாக வெற்றி தேவை என்பதை நான் எதிர்பார்க்கிறேன் என நேர்காணல் ஒன்றில் நடிகர் விதார்த் கூறியுள்ளார். 


ரவி முருகையா இயக்கத்தில் நடிகர்கள் விதார்த், சரவணன் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‘ஆயிரம் பொற்காசுகள்’. இந்த படத்தில் அருந்ததி நாயர், வணக்கம் கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், வெர்டிவல் ராஜா, பவன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜோஹன் சிவனேஷ் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (டிசம்பர் 22) தியேட்டரில் வெளியானது. 


இப்படியான நிலையில் இந்த படத்துக்கான விளம்பரங்களில் முதல் நாள் பார்க்கும் ரசிகர்கள் ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொரு டிக்கெட் இலவசம் என தெரிவிக்கப்பட்டது. இது மிகப்பெரிய அளவில் திரையுலகில் பேசுபொருளானது. இப்படியான நிலையில் நடிகர் விதார்த் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். 


அதில், “ஆயிரம் பொற்காசுகள் படத்தில் நான் நடிக்க காரணமே இயக்குநர் ரவி முருகையா தான். காரணம் எனக்கு மைனா படத்துக்கு முன்பிருந்தே அவரை தெரியும். அந்த படத்துக்கு பின் இருவரும் இணைவதாக இருந்தது. அது தள்ளிக்கொண்டே போய் இருந்தது. அவரிடம் இருந்து திருநாவுக்கரசு என்ற கதையை படமாக்க வாங்கி வைத்துள்ளேன். இப்படியான நிலையில் ஒருநாள் என்னிடம் போன் செய்து நான் இயக்குநராக கமிட்டாகியுள்ளேன். நீங்கள் தான் ஹீரோ என சொன்னார். என்ன கதை என கேட்டேன். ரவி முருகையா இதுவரை 20க்கும் மேற்பட்ட கதைகளை என்னிடம் சொல்லியுள்ளார். அதில் ஒன்று தான் என பதிலளித்தார். ஷூட் ஆரம்பிச்சி 2வது நாள் தான் படப்பிடிப்புக்கு சென்றேன். அன்றைக்கு இரவு தான் எனக்கு படத்தின் கதை என்ன என்பதே தெரியும்" என கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், ‘என்னுடைய படங்களை எடுத்துக் கொண்டால் விமர்சனமாக ‘செம படம்’ என சொல்வார்கள். ஆனால் வியாபார ரீதியாக வசூல் கம்மி தான். அதை இறுகப்பற்று படம் உடைத்தது. அந்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதில் நடித்த நடிகர்கள் தான் இதெற்கெல்லாம் காரணம். இப்போதெல்லாம் சின்ன படம் பார்ப்பவர்கள் நல்லாருக்கு என சொல்வார்கள். ஆனால் கூட்டம் வருவதில்லை என தியேட்டர் உரிமையாளர்கள் கூறுவார்கள். அப்படிப்பட்ட நிலை தான் உள்ளது. 


என்னை பொறுத்தவரை படம் பார்ப்பவர்கள் விமர்சன ரீதியாக பாராட்டும் போது சந்தோசப்படுவேன். ஆனால் இந்த மாதிரி நல்ல படங்கள் அடுத்தடுத்து பண்ண சிரமப்பட வேண்டியதாக இருக்கு. ஏனென்றால் நான் வியாபார ரீதியாக என்னை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள் வருமானம் எடுத்தால் தான் அடுத்தடுத்து படம் எடுக்க வருவார்கள். நான் கேட்டு 25,30 கதைக்கு மேல் கேட்டு இன்னும் படமாக்கப்படாமல் இருக்கிறது. இன்னும் தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் இருக்கிறார்கள். அப்ப எனக்கு வருமான ரீதியாக வெற்றி தேவை என்பதை நான் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.