ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. தந்தை மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருக்கிறார் தரமணி, ராக்கி உள்ளிட்ட படங்களில் நடித்த வசந்த் ரவி. படத்தில் இவரது கதாபாத்திரம் கவனம் ஈர்த்திருக்கும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினியை அப்பா என்று அழைத்து உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகர் வசந்த் ரவி.
ரஜினி அப்பா
“ஜெயிலர் எனது நடிப்பு வாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கற்களில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக நான் திரையுலகில் கடைபிடித்து வந்த அர்ப்பணிப்பும் பொறுமைக்கும் கிடைத்த பரிசு.
பல்வேறு அனுபவங்களால் நிறைந்த எனது ஆறு வருட பயணம், சினிமா துறையில் எனக்கு வழிகாட்டியாக இருந்தது. இயக்குநர் ராம் சார் என்னை பிரபுநாத் என்று அறிமுகப்படுத்திய ஆகஸ்ட் 11, 2017 அன்று "தரமணி" படத்தில் நான் அறிமுகமானதில் இருந்து, இன்று வரை, ஆகஸ்ட் 10, 2023 அன்று, நடிகர் ரஜினிகாந்த் சாரின் மகன் அர்ஜூன் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் வரை வந்திருக்கிறேன், இந்த உலகம் எனக்கு விலைமதிப்பில்லாத ஒரு பரிசை வழங்கியிருக்கிறது.
படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் எனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து என்னை ஊக்குவித்தும் ஆதரவளித்து வரும் ரஜினிகாந்த சாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினி சார், செட்டில் உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியும் என் வாழ்வில் மறக்க முடியாத நினைவாக மாறிவிட்டது.
உங்களது வார்த்தைகள் என்னை ஒரு நடிகனாக மட்டும் இல்லை. ஒரு நல்ல மனிதனாகவும் என்னை மாற்றியிருக்கிறது. நான் எப்போதும் உங்களை "சார்" என்று அழைத்தாலும், இன்று உங்களை "அப்பா" என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன். ரஜினி அப்பா. நீங்கள் ரீல் மற்றும் நிஜ வாழ்க்கையில் என் ரத்தமாரே. "நான் உங்களை ரொம்ப நேசிக்கிறேன் அப்பா, நீங்கள் எப்போதும் எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன்" (பின்குறிப்பு : ஜெயிலரில் நான் உங்களிடம் சொல்லும் ஒரு வசனம் இது , ஆனால் நான் அதை உங்களிடம் நிஜமாக சொல்கிறேன்)
அன்புடன்
வசந்த் ரவி (அர்ஜுன் முத்துவேல் பாண்டியன்)”
என்று பாசமான ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் வசந்த் ரவி. இவரது இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.