விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த  'வெண்ணிலா கபடி குழு' படத்தில், துணை நடிகராக வந்த வைரவன் சிறிது நாட்களுக்கு முன்னர் காலமானார். இவரது மறைவை, பல்வேறு ஊடங்கங்கள் வெவ்வேறு கோணத்தில் இந்த செய்தியை அனுகினர். அதில் சில ஊடங்கங்கள், தனது கணவர் வயிறு வெடித்து இறந்ததாக செய்தியை பரப்பி வருவதாகவும், இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். 


உதவி கேட்டு வீடியோ:


வெண்ணிலா கபடி குழு படத்தில் கதாநாயகன் விஷ்ணுவின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர் ஹரிவைரவன். அதனைத்தொடர்ந்து, கார்த்தி நடித்த நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். ஆனால், அதன் பின்னர் அவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் கை கூட வில்லை. இதனால் வறுமையின் பிடியில் தள்ளப்பட்ட அவர், பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடியில் சிக்கி தவித்தார்.


அதனைத்தொடர்ந்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டார். இதயநோயுடன், இரண்டு சிறுநீரகங்களும் அவருக்கு செயலிழந்தன. அதன்காரணமாக அவரின் கால்கள் வீங்கி நடக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் அவரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வீடியோ வெளியிட்டு உதவிக்கேட்ட அவர், “ தனக்கு 11 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருக்கிறது. இதனால் உடலின் பல பாகங்கள் வீக்கமடைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக மேற்கொண்ட சிகிச்சைக்காகவே மொத்த நகைகளும், பணமும் காலியாகிவிட்டது என பேசினார். 




வைரவன் இறப்பு:


வைரவனின் வீடியோ வைரலான நிலையில், இவருடன் நடித்திருந்த விஷ்ணு விஷால், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டினர். இதையடுத்து, உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் இம்மாதம் 3 ஆம் தேதி காலமானார். இதனால், தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. வைரவனின் இறப்பினை, பல்வேறு ஊடகங்கள் செய்தியாக மாற்றின. ஒரு சில ஊடங்கங்கள், ஒரு படி மேலே போய், வைரவனின் இறப்பு குறித்து சில தவறான செய்திகளையும் பரப்பின. அதில், ஓரிரண்டு தனியார் ஊடகங்கள், வைரவன் வயிறு வெடித்து இறந்ததகாக கூறின. இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதத்தில், நடிகர் வைரவனின் மனைவி ஒரு நேர்காணலை கொடுத்துள்ளார்.




”மன உளைச்சலுக்கு ஆளானேன்..”


வைரவன் உடல் நிலை மோசமாக இருந்த போது, அவரை குழந்தை போல பார்த்துக் கொண்டவர் அவரது மனைவி கவிதா. தற்போது வைரவன் உயிரிழந்துள்ள நிலையில், வைரவனின் மனைவி கவிதா ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.  அவர் பேசியது பின் வருமாறு, “வைரவன் இறந்த அடுத்த இரண்டு நாட்கள் வந்த வீடியோக்கள் அனைத்தையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாருமே நல்லபடிகாயத்தான் செய்திகளை போட்டிருந்தார்கள். ஆனால் ஒரு தனியார் ஊடகத்தில், ‘வைரவன் வயிறு வெடித்து’ இறந்ததாக கூறியிருந்தார்கள்.


ஒருவரது வாழ்க்கை குறித்து அவர்கள் கூறாத ஒரு விஷயத்தை செய்தியாக போடுவது மிகவும் தவறு. நான் இதற்கு முன்னரே வைரவனின் இறப்பு குறித்து பேசியுள்ளேன். ஆனாலும் ஒரு சிலர் அவர் வயிறு வெடித்து இறந்ததாக கூறுகின்றனர். பொது அறிவு இருப்பவர்கள் யாராவது இப்படி பேசுவார்களா...?


வயிறு வெடித்து இறந்த உடலை எப்படி இறுதி சடங்கில் வைத்திருக்க முடியும். அது மட்டுமன்றி, என் மகளை என்னுடைய கணவர் மரணப் படுக்கையில் இருந்த போது அழைத்து பேசியதாகவும், ’அம்மாவை நல்லா பாத்துக்கோ’ என்று அவர் கூறியதாகவும் பல செய்திகளை கூறிவருகின்றனர். எனது மகளுக்கு அவளுடைய அப்பா இறந்த விஷயமே தெரியாது. இப்படியெல்லாம் பொய் செய்திகளை பரப்புவது என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. இவ்வாறு நடக்காத விஷயங்களை நடந்ததாக கூறிய ஊடகங்கள், எனக்கு பதில் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் நான் நீதிமன்றத்திற்கு போவேன்” என்று கண்ணீர் மல்க அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார் கவிதா.