அஜித் சார் ரொம்ப எளிமையானவர் ஆனால் அவர் கூட இருப்பவர்கள் தான் அவரிடம் யாருமே நெருங்கவிட மாட்டார்கள் என்று நடிகர் வைகாசி ரவி தெரிவித்துள்ளார்.
வான்மதி திரைப்படம் தான், அஜித்துடன் வைகாசி ரவி முதலில் நடித்த படம். அதற்கு முன்னால் அவரை நேரில் பார்த்ததில்லை.
வான்மதி 1996 பொங்கல் அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக சுவாதியும், நடித்தனர். இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாகும். இந்தப் படத்தில் தேவா இசையமைத்துப் பாடிய பிள்ளையார்பட்டி ஹீரோ நீ தான்பா பாடல் அந்தக் காலத்தில் செம்ம ஹிட் பாடல். இப்படத்தில் வைகாசி ரவி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோல் அஜித்தின் ரெட் திரைப்படத்திலும் வைகாசி ரவி நடித்திருப்பார். அந்தப் படத்தில் அஜித்தின் கூட்டாளிகளாக வருவோரில் வைகாசி ரவியும் படம் முழுவதும் இருப்பார்.இந்நிலையில், அஜித்துடனான தனது அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்தப் பேட்டி, “வான்மதி திரைப்படம் தான், நான் அஜித் சாருடன் செய்த முதல் படம். அந்தப் படத்தைப் பற்றி ரெண்டு நாளைக்கு முன்னால் தான் சொன்னார்கள். அப்புறம் அடுத்த நாளே சூட்டிங்குக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. நானும், சில துணை நடிகைகளும் வேனில் அழைத்துச் செல்லப்பட்டோம். அங்க போன பின்னர் தான் நான் முதன்முதலாக அஜித் சாரைப் பார்க்கிறேன். பார்த்தால் அவ்வளவு இயல்பாக இருக்கிறார். எல்லோரிடமும் இயல்பாகப் பேசுகிறார்.
ஒரு காமெடி சீன் பற்றி என்னிடம் வந்து கேட்டார். அது ஒரு பஸ் ஸ்டாண்ட் சீன். இந்த சீனை நீங்கள் பண்ணா எப்படி செய்வீங்க சொல்லுங்க என்றார். நானும் தயக்கத்தோடு செய்து காட்டினேன். அப்புறம் அதை உள் வாங்கிக் கொண்டு அவர் பாணியில் செய்தார். இதெல்லாம் இவரிடம் கேட்கிறோமே என்றெல்லாம் நினைக்கவே இல்லை. அவருக்கு காமெடி சீன் என்றால் ரொம்ப விரும்பி நடிப்பார். அவர் அவ்வளவு இயல்பானவர்.
அவர் கிட்ட பந்தாவே இல்லை. அதை மறக்கவே முடியாது. அதற்குப் பின்னர் தீனா வந்தது. அந்தப் படத்தில் எல்லாம் நடிக்கும் போது அஜித் சார், தல ஆகிவிட்டார். ஆனால் அப்போதும் அவர் எளிமையானவராகவே இருந்தார்.. ஆனால் அவருடன் இருப்பவர்கள் தான் அவரை நெருங்கவே விட மாட்டார்கள். நம்ம போய் பேசினால் அஜித் சார் இயல்பாகவே பேசுவார். ஆனால் கூட இருப்பவர்கள், சார தொந்தரவு பண்ணாதீங்க என நெருக்கடி தருவார்கள். இரண்டு மூன்று தடவை அவர்கள் அப்படிச் சொன்னால் அப்புறம் நமக்கே கொஞ்சம் சங்கடம் ஆகிவிடும்.
ரஜினி சார் கெத்து..
ரஜினி சாருடன் முத்து படத்தில் நடித்தேன். எனக்கு 30 நாள் கால் சீட். அந்த 30 நாளும் ரஜினி சாரை பார்த்ததே எனக்கு பெரிய சந்தோஷம் தான். ஒரு காட்சியில் நான், செந்தில் சார், ரஜினி சார் நிற்க வேண்டும். நான் எங்கே ஓவர்லேப் செய்துவிடுவேனோ என்று பயந்து ஒதுங்கி நின்றேன். திடீரென ஒரு கை ஏன் ஒதுங்கி நிற்கிறீங்க என்று என்னை இழுக்க திரும்பிப் பார்த்து அப்படியே விரைத்துப் போய்விட்டேன். அது ரஜினி சாரின் கைகள்.
ஏதோ பிறவிப் பயன் அடைந்தது போல் இருந்தது. ரஜினி சாரின் ஸ்டைலை ஒட்டுமொத்த செட்டும் ரசிக்கும். நான் இன்றைக்கும் என்றைக்கும் ரஜினி சாரின் ஃபேன் தான். அவர் என்ன பண்ணாலும் அது ஒரு ஸ்டைல். செட்டில் ஒருத்தர் விடாமல் எல்லோருக்கு வணக்கம் வைப்பார். நாம் வணக்கம் சொல்ல கை தூக்கும் முன் அவர் வணக்கம் சொல்லி முடித்திருப்பார். அப்படிப்பட்ட மனிதர் அவர்” இவ்வாறு வைகாசி ரவி அந்தப் பேட்டியில் பேசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்