பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். சுராஜ் இயக்கிய இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்தாண்டு டிசம்பர் 4 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்  இசையமைத்திருந்தார். 


இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த போதும் காமெடி காட்சிகள் எதுவும் கைக்கொடுக்காததால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வியடைந்தது. இதனால் தனது அடுத்த படத்தின் கதையை வடிவேலு கவனமாக தேர்வு செய்து வருகிறார். அதேசமயம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்திலும், ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2 படத்திலும் வடிவேலு மிக முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். 


தன் உடல்மொழியாலும் வசனங்களாலும் சினிமாவில் பல ஆண்டு காலமாக நடிக்காவிட்டாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வடிவேலு. நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறிய இவரை பலரும் மீண்டும் காமெடியனாக நடிக்கச் சொல்லி வலியுறுத்தி வருகின்றனர். 


இந்நிலையில் வடிவேலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கும் சர்வதேச  ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில்  கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பிரிவின் கீழ்  இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதை பாராட்டும் பொருட்டு துணை நடிகர் கோகுலுக்கு சிறப்பு விருதும் கொடுக்கப்பட்டது. முன்னதாக இந்த அமைப்பு சமூக சேவைக்கான டாக்டர் பட்டத்தை நடிகர் நடிகர் ராகவா லாரன்ஸிற்கு  வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.