இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்த நிலையில் நடிகர் வடிவேலு நடித்துள்ள பட காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் அரண்மனை வீட்டில் இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96.  உலகின் நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு ராணி எலிசபெத் சொந்தக்காரரான அவரது இறப்புக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 






ராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து அவரின் மூத்த மகனான சார்லஸ் அடுத்த மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனிடையே பி. வாசு இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான பிரபுதேவா, நக்மா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் லவ் பேர்ட்ஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை வாயிலில் நடந்தது. இதில் வடிவேலு பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு தவிப்பார். 






அப்படியே சுற்றி திரியும் அவர் அரண்மனை வாசலுக்கு செல்வார். அங்கிருந்து ராணியம்மா...எலிசபெத் ராணியம்மா...கத்துவார். அந்நேரம் பார்க்க ராணி எலிசபெத் காரில் அரண்மனையிலிருந்து வெளியே செல்வார். அவரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு எலிசபெத் ராணி...உலகத்தை ஆண்ட புண்ணியவதியே...எம்மா நான் இங்கதான் தொலைஞ்சி போனேன் என சொல்லுவார். அப்படியே ராணி தன்னை கண்டுக் கொள்ளாமல் செல்வதைப் பார்த்து, ”ராணி மகாராணி...இங்கிலாந்து ராணி...வேக வேகமாக போகும் எலிசபெத் ராணி...தொலைந்து போய் 3 நாளா அலையிறேனே ராணி...நிலைமை தனை மறந்து விட்டு காரில் போகும் ராணி...பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு புலம்புறனே ராணி”... என பாட்டு பாடுவார். 






இங்கிலாந்து ராணி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள் பலரும் இந்த பாட்டையும்,மருதநாயகம் படத்தின் தொடக்க விழாவில் கமலுடன் இருக்கும் போட்டோவையும் பகிர்ந்து வருகின்றனர்.