பிரபல காமெடி நடிகர் போண்டா மணி கிட்னி செயலிழப்பால் அவதிப்பட்டு வரும் நிலையில் அவருக்கு வடிவேலு உதவி செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1994 ஆம் ஆண்டில் வெளியான தென்றல் வரும் தெரு படம் போண்டா மணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து கவுண்டமணி, வடிவேலு, விவேக்குடன் இணைந்த அவர், நான் பெத்த மகனே, சுந்தரா டிராவல்ஸ், அன்பு, திருமலை, ஐயா, ஆயுதம், வின்னர், வேலாயுதம், படிக்காதவன், மருதமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை காட்சிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது இரண்டு கிட்னிகளும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்த தகவலை நடிகர் பெஞ்சமின் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து போண்டா மணியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக தெரிவித்தார். மேலும் மாமன்னன் படத்தில் குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ள நிலையில், பிற படங்களில் இடம்பெறும் காமெடி மக்கள் விரும்புவதை காட்டிலும் அதிகமாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
அப்போது வடிவேலுவிடம் கிட்னி செயலிழப்பால் அவதிப்பட்டு வரும் போண்டா மணி உதவி கேட்டிருந்தாரே? என்ன மாதிரி உதவி பண்ண போகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. உடனே அவர் தன்னால் இயன்ற உதவியை செய்யவுள்ளதாக தெரிவித்தார்.