சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் மணிமகுடம் கலந்த மணிமண்டபம் என நடிகர் வடிவேலு கடந்த ஆண்டு நெகிழ்ச்சியுடன் தெரிவித்த நிகழ்வு வைரலாகிறது
சென்னை மெரினாவில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், நடிகர் ரஜினிகாந்த், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் அருங்காட்சியகம், வாழ்க்கை வரலாறு தொகுப்பு கொண்ட எழிலோவியங்கள், கலைஞர் எழுதிய புத்தகங்களை வாங்கும் வகையில் புத்தக விற்பனை நிலையம் என ஏகப்பட்ட வசதிகள் உள்ளது.
இதனிடையே இந்த நினைவிடத்தை நடிகர் வடிவேலு நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கலைஞர் நினைவிடம் பற்றி நெகிழ்ச்சியான கருத்துகளை கூறினார். அதாவது, “கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை பார்க்கும் போது மிகப்பெரிய பிரமிப்பாக உள்ளது. இது கலைஞர் அய்யாவின் சமாதி அல்ல, சன்னதி. இதன் உள்ளே ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அதனை காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது. ஆயிரம் கண்கள் வேண்டும். அந்தளவுக்கு ரொம்ப அழகாக நினைவிடத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். கலைஞர் கருணாநிதி எப்படியெல்லாம் வாழ்ந்தார், அவரின் வரலாறு, போராட்டம், கஷ்டங்கள் என உள்ளே போய்விட்டு வந்தால் தெரிந்துக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது.
இதனை மக்கள் பார்வைக்காக மார்ச் 6 ஆம் தேதி முதல் திறந்து வைக்கிறார்கள். எல்லாரும் கண்டிப்பாக வந்து பார்க்க வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். அதன் விபரங்களை சரியாக செய்து அனைவரும் வர வேண்டும். உள்ளே இருந்த கலைஞர் உலகம் என்ற இடத்தில் அவருடன் அமர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. கலைஞர் தனது குரலில் நீ வந்ததற்கு ரொம்ப நன்றி என சொன்னார்.
அவர் என்னையும், நான் அவரையும் கும்பிட்டு வணக்கம் வைத்ததோடு மட்டுமல்லாமல் புகைப்படம் எடுத்தோம். இதெல்லாம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதைவிட முக்கியம் என்னவென்றால் திமுக தொண்டனுக்கு இது குலதெய்வ கோயில். திமுக என்கிற கோட்டையில் ஒரு செங்கலை கூட யாராலும் ஏன் உருவ முடியவில்லை என்பதை கலைஞர் நினைவிடம் சென்று பார்த்தால் புரியும்.
அந்த கட்சியை வளர்க்க அவர் பட்ட கஷ்டங்கள், போராட்டங்களை பார்க்கும்போது புல்லரிக்கிறது. இது மணிமகுடம் கலந்த மணிமண்டபம் என்றே சொல்லலாம். உண்மையிலேயே தொண்டனுக்கு மட்டுமல்ல, நம் மக்களுக்கும், உலக தமிழர்களுக்கு என எல்லாருக்கும் கொடுப்பினையான மணிமண்டபமாகும். இதனை உருவாக்க காரணமாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எல்லாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்