பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு மற்றும் துணிவு படத்தில் ரிலீஸ் பற்றி நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் பதிலளித்துள்ளார். 






தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் துணிவு படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி துணிவு படத்தின் ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. 


அதன்படி துணிவு படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், படம் பொங்கலுக்கு நிச்சயம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தின் ஓடிடி தளத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவியும் கைப்பற்றியுள்ளது. 






அதேசமயம் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனால் 8 ஆண்டுகளுக்குப் பின் விஜய், அஜித் படங்கள் நேரடியாக மோதுவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 


இந்நிலையில் பிரபல இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள உதயநிதி ஸ்டாலினிடம், நெறியாளர் ரெட் ஜெயன்ட் நிறுவனம் துணிவு படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியதால் அதிக ஸ்கிரீன்கள் கிடைக்கும் என ரசிகர்கள் சொல்கிறார்களே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சினிமாவில்  நிச்சயம் அப்படி பண்ண முடியாது. அதுவும் அன்னைக்கு விஜய்யின் வாரிசு படம் வெளியாகும் என சொல்கிறார்கள். அதனால சமமாக தான் தியேட்டர்கள் கிடைக்கும். இதுக்கு முன்னாடி இதுபோன்ற இருபடங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை தான் பெற்றிருந்தது.






ஆக துணிவு, வாரிசு படம் நன்றாக போகும் என்ற எதிர்பார்க்கிறோம். மேலும் துணிவு படத்தின் தியேட்டர், சேட்டிலைட் உரிமையை 4 மாதங்களுக்கு முன்பே வாங்கி விட்டோம். ஆனால் சீக்கிரமே அறிவிக்க வேண்டாம். தீபாவளி கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்றே முடிவு செய்தோம். இப்படி படத்தின் உரிமையை வாங்குறப்ப இவங்களுக்குத்தான் சப்போர்ட் பண்றோம்ன்னு சொல்வாங்க. ஆனால் பீஸ்ட் நாங்க தான் ரிலீஸ் பண்ணோம். வலிமை படத்தில் பெயர் போடலையே தவிர சில ஏரியாக்களில் நாங்கள் தான் வெளியிட்டோம் என அந்த நேர்காணலில் உதயநிதி தெரிவித்துள்ளார்.