நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் மாமன்னன் படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.


கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை  என பல பகுதிகளில் நடைபெற்றது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடிகர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பின், இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன். இது தான் என் கடைசி படம் என தெரிவித்திருந்ததால் மாமன்னன் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 






இதனிடையே மாமன்னன் படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (மே 1) காலை 10.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சொன்னதற்கு முன்னதாகவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் வெள்ளை வேட்டி, சட்டையில் வடிவேலுவும், வாளுடன் உதயநிதி ஸ்டாலினும் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கேப்ஷனும் இடம் பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.