திருநெல்வேலி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன உதயா தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான பாதி படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளரின் மகன், இயக்குநரின் தம்பி என்ற அடையாளம் கிடைத்தாலும், ஒரு வெற்றிக்காக போராடி காெண்டிருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள அக்யூஸ்ட் என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் விழாவில் பேசிய நடிகர் உதயா, சினிமாவில் பல ஏற்ற இரக்கங்களை பார்த்துவிட்டேன். 25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். என்னை சுற்றி நல்ல நண்பர்கள், நல்லவர்கள் இருப்பதால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிகிறது. அக்யூஸ்ட் படத்தில் நான் மட்டும் ஹீரோ இல்லை. யோகி பாபு, அஜ்மலும் இருக்கிறார்கள். யோகி பாபு சார் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். அதேபோன்று சினிமாவில் நான் நல்லபடியாக வளர வேண்டும் என நினைத்தவர்கள் 2 பேர் ஒன்று என் அம்மா, மற்றொருவர் நடிகர் விவேக். இப்போது இருவரும் இல்லை என்பது மன வருத்தமாக இருக்கிறது என உதயா தெரிவித்தார்.
திருநேல்வேலி படத்தில் நடித்தபோதே விவேக் சார் என்னை ரொம்ப உற்சாகப்படுத்தினார். என்னுடைய படங்கள் வெளியாகும் நேரத்தில் வந்து வாழ்த்துவார். நான் ஜெயிக்க வேண்டும் என பேசியவர் விவேக் சார். அவர் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அவரது முதல் நினைவு நாள் வந்தபோது, விருகம்பாக்கத்தில் அவர் இருந்த தெருவில் விவேக் சார் பெயர் வைக்க வேண்டும் என பூச்சி முருகன் அண்ணனிடம் கோரிக்கை வைத்தேன். அதன் பிறகு முதல்வர் சின்ன கலைவாணர் விவேக் பெயரில் அந்த சாலை இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வருக்கு இந்த நேரத்தில் நன்றி என உதயா தெரிவித்தார்.