தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர் என பெயர் பெற்றவர் நடிகர் டி.எம்.கார்த்திக் . இன்று நேற்று நாளை படத்தில் விஞ்ஞானியாக நடித்து அசத்தியிருப்பார். இதுமட்டுமல்லாமல் மதராசப்பட்டினம், தெய்வ திருமகன், தில்லுக்கு துட்டு, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் சுதந்தி தினத்தை முன்னிட்டு , அவர் பெண் விடுதலை போராட்ட வீர மங்கைகளை கவுரவ படுத்தும்விதமாக, அவர்களை போலவே மேக்கப் மற்றும் உடைகள் அணிந்து ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.“இந்தியாவின் வீரஞ்செறிந்த பெண் போராளிகள் (brave women warrior of india ) ” என்ற தலைப்பில் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில் ராணி வேலு நாச்சியார், கிட்டூர் ராணி சென்னம்மா,ராணி பத்மினி,ஜான்ஸி ராணி இலட்சுமி பாய் , பேகம் ஹஸ்ரத் மஹால் போன்ற சுதந்திர போராட்ட வீர மங்கைகளை போல தத்ரூபமாக வேடமிட்டு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
டி.எம்.கார்த்திக் கடந்த 1995-ஆம் ஆண்டு முதலே நாடகங்களில் நடித்து வருகிறார். இதுவரையில் 500-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளாராம். 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரம், நகைச்சுவை கதாபாத்திரம், நெகட்டிவ் ரோல், சப்போட்டிங் ரோல் என அனைத்திலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் இவர். இது தவிர நிறைய சமூக நலத்திட்டங்களையும் செய்துள்ளார். கடந்த மாதம் தனது சொந்த பணம், நண்பர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளார். அதனைவைத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலை இழந்தவர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு உதவி செய்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாது, ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திலும் டி.எம்.கார்த்திக் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.