தம்பி ராமையா ஒரு சிறந்த துணை நடிகர். மைனா படத்தில் காவலராகவும், கும்கி படத்தில் யானைப் பாகனின் உதவியாளராக அவர் பக்காவாகப் பொருந்தியிருப்பார். அறுபது வயசுக்கு மேல் அதுவே பழகிடும் என்ற அவரது காமெடி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சாட்டை படத்தில் ஒரு கோபக்கார ஆசிரியராக அவ்வளவு பொருத்தமாக நடித்திருப்பார். அப்படிப்பட்ட தம்பி ராமையா, தனது மகன் ‛சர்வைவர்’ உமாபதிக்காக யாரிடத்திலும் இதுவரை வாய்ப்பு கேட்டு நின்றதில்லை எனப் பேசியுள்ளார்.
உமாபதி கதாநாயகனாக நடித்து தம்பி ரமையா நடிப்பில் அண்மையில் தண்ணி வண்டி என்ற படம் வெளியானது. இப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்க படத்தின் தயாரிபாளர் சரவணன் தம்பி ராமையா மீது போலீஸில் புகாரளித்துள்ளார். புகார் குறித்து சரவணன், கடந்த 2015 ஆம் ஆண்டு நான் ஒரு படத்தைத் தயாரிக்கவிருந்தேன். அப்போது என்னை அணுகிய தம்பி ராமையா, தனது மகனை நடிக்க வைத்தால் தானே எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். ஆனால், தண்ணி வண்டி படத்தின் விளம்பரத்துக்குக் கூட தந்தையும் மகனும் வரவில்லை. இதற்கு நஷ்ட ஈடாக தம்பி ராமையா எனக்கு ரூ.4 கோடி தர வேண்டும் என்றார்.
இந்தப் பிரச்சனை குறித்து மனம் திறந்து பேசியுள்ள தம்பி ராமையா, என் மகனுக்காக நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. அவனை நீயே உன் விருப்பங்களை துரத்து. உன் காதல் உன்னை துரத்தினால் தொழிலை மாற்று என்று சொல்லியிருக்கிறேன். நான் அப்படித்தான் தேடினேன் என்று அவனிடம் கூறியுள்ளேன். இன்று நான் தேர்ந்த நடிகராக இருக்க பிரபு சாலமன் தான் காரணம். அவர் எனக்குத் தெரியாத என்னை வெளிக்கொண்டு வந்தார். அவருக்காக ஒரு படம் நடிக்கச் சென்றேன். அதனாலேயே தண்ணி வண்டி படத்திற்காக பேச முடியவில்லை.
எனது மகனின் சிறுத்தை சிவா என்ற படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படம் வெளியானதும் தண்ணி வண்டி படத்தை வெளியிடலாம் என்று சொன்னேன். ஆனால் சரவணன் அதை ஏற்கவில்லை. என் மகன் கொரோனா பாதித்து உடல்நிலை குன்றியிருந்தான். அதனால் தான் அவனாலும் கலந்து கொள்ள இயலவில்லை. இதையெல்லாம் சரவணன் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் எனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. என் மகனை நான் யதார்த்தங்கள் புரிந்து நடக்கும் நபராக வளர்த்துள்ளேன். என்னைப் பொறுத்த வரை திறமையின் அடிப்படையில் கிடைக்காதது கருணையின் அடிப்படையில் நடக்காது. அவ்வாறு கருணையின் அடிப்படையில் கிடைப்பது நீண்ட காலம் நிலைக்காது. என் மகன் அவன் திறமையால் ஜெயித்தால் அது வெற்றி. ஒரு வேளை தோற்றால் அது அவனுக்கு வாழ்க்கை அனுபவம். தோற்றாலும் ஒன்றுமில்லை. இந்த உலகத்திலேயே எனக்குப் பிடித்த நபர் நான் தான். எல்லோரும் முதலில் அவர்களை நேசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.