Vijay Highest Collection Movies: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி அதிக வசூல் ஈட்டிய படங்கள் தொடர்பாக அறியலாம்.


வசூல் மன்னன் “விஜய்”:


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், வசூல் மன்னனாகவும் திகழ்கிறார். படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. விஜய் படம் என்றாலே நிச்சயம் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும் என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால், தான் அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள், அவரது முந்தைய படங்களின் சாதனையை சர்வ சாதாரணமாக தகர்த்து வருகிறது. அந்த வகையில் தான் இதுவரை இல்லாத வகையில், விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 500 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் imdb அறிக்கையின்படி, விஜய் நடிப்பில் வெளியாகி அதிக வசூல் ஈட்டிய முதல் 10 படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


10. கத்தி:


விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான கத்தி திரைப்படம், விவசாயிகளின் பிரச்னை தொடர்பாக மிகவும் வலுவாக பேசி இருந்தது. இப்படம் உலகம் முழுவதும் 126.8 கோடி ரூபாயை வசூலாக வாரியது.


09. துப்பாக்கி


மாஸ் ஹீரோவாக கோலோச்ச ஒரு சரியான படத்திற்காக காத்திருந்த விஜய்க்கு கிடைத்த கச்சிதமான இயக்குனர் தான் ஏ.ஆர். முருகதாஸ். இவர்கள் கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் துப்பாக்கி. 2012ம் ஆண்டு வெளியாகி ஸ்லீப்பர் செல் எனும் தீவிரவாத கூட்டம் பற்றி பேசியிருந்த இப்படம், ஏகோபித்த வரவேற்பை பெற்று 127 கோடி ரூபாயை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.


08. தெறி:


நீண்ட நாட்கள் கழித்து அட்லீ எனும் இளம் இயக்குனருடன் கைகோர்த்தார் விஜய். இந்த கூட்டணியில் 2016ம் ஆண்டு வெளியான தெறி திரைப்படம், விஜயை புதிய பரிமாணத்தில் காட்டியது. ஆல் செண்டரிலும் ஹிட் அடித்த இந்த படம் 153 கோடி ரூபாயை வசூலித்தது.


07. பீஸ்ட்:


நெல்சன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்தாண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூலில் எந்த பின்னடைவயும் சந்திக்காமல், 235 கோடி ரூபாயை வசூலாக அள்ளியது.


06. மாஸ்டர்:


2021ம் ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் திரையரங்குகள் முடங்கிக் கிடந்த நிலையில், மாஸ்டர் திரைப்படம் வெளியானது. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இந்த முதல் திரைப்படம், திரையரங்குகளை மீண்டும் திருவிழாக்கோலாமாக்கியது. பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் 243 கோடியே 60 லட்ச ரூபாயை வசூலாக ஈட்டியது. 


05. சர்கார்:


துப்பாக்கி, கத்தி போன்ற பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி சர்கார் படத்திற்காக 3வது முறையாக சேர்ந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் எந்த தொய்வையும் எதிர்கொள்ளவில்லை. அதன்படி, 253 கோடி ரூபாயை வசூலாக வாரிக்குவித்தது.


04. மெர்சல்:


தெறி படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இரண்டாவது திரைப்படம் மெர்சல். இதில் இடம்பெற்று இருந்த வசனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்ப, திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. இதனால், அப்படம் உலகம் முழுவதும் 257 கோடி ரூபாயை வசூலித்து சூப்பர் ஹிட் ஆனது.


03. வாரிசு:


வம்சி இயக்கத்தில் குடும்பக் கதைக்களத்தை மையமாக கொண்டு விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் வாரிசு. மிகவும் பழையை கதை என்றெல்லாம் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டாலுமே கூட, உலகம் முழுவதும் 303 கோடி ரூபாயை வசூலாக அள்ளியது வாரிசு.


02. பிகில்:


தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி 3வது முறையாக கைகோர்த்த படம் பிகில். மகளிர் கால்பந்தாட்டத்தை மையாமாக கொண்ட இந்த படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் விஜயின் ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் விளைவாக 304 கோடி ரூபாயை வசூலாக அள்ளியது.


01. லியோ:


மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் லியோ படத்திற்காக இரண்டாவது முறையாக கைகோர்த்த படம் ”லியோ”. லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ், பிரமாண்ட தயாரிப்பு என விஜய் படங்களில் இதுவரை இல்லாத அளவிலான, பெரும் எதிர்பார்ப்புகளுடன் இப்படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என விமர்சனங்கள் குவிந்தன. அதேநேரம், தொடர் விடுமுறை, அதிரடியான ஆக்‌ஷன் மற்றும் விஜயின் அட்டகாசமான நடிப்பு ஆகியவற்றால்,  வெளியான 12 நாட்களிலேயே லியோ திரைப்படம் 540+ கோடிகளை வசூலித்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியாகி அதிக வசூல் ஈட்டிய படங்களின் வரிசையில் ”லியோ” முதலிடம் பிடித்துள்ளது.


அசத்தல் கூட்டணி:


ஏ.ஆர். மூருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படம் தான், விஜய் நடிப்பில் 100 கோடி வசூலித்த முதல் திரைப்படமாகும். இவர்களது கூட்டணியில் வெளியான மூன்று படங்களுமே விஜய்க்கு வசூல் ரீதியாக பெரும் வெற்றிகளாக அமைந்தன. இதேபோன்று அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி உள்ளிட்ட 3 படங்களும் விஜயை ஆக்‌ஷன் ஹீரோவாக மேலும் ஒரு படி உயர்த்தின. இறுதியாக மாஸ்டர் மற்றும் லியோ படங்கள் மூலம் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாக விஜயை மாற்றியுள்ளார்.