எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் அவர்களுடன் பயணிக்க ரெடி என நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் காமெடி மூலம் தனக்கென தனியிடம் பிடித்தவர் தாடி பாலாஜி. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு இன்றைய தலைமுறையினரிடையே பிரபலமானார். ஒல்லியான தேகம், வித்தியாசமான வசன உச்சரிப்பு என பல படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது சமூகத்தில் மக்களுக்கு உதவும் பல்வேறு செயல்களில் தாடி பாலாஜி ஈடுபட்டு வருகிறார். 


அந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருவள்ளூரில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தாடி பாலாஜி கலந்து கொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி, “எல்லாருக்கும் வணக்கம். சூரிய வெப்பத்தை தாண்டி நான் இன்னைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்கு காரணம் மக்கள் அனைவரும் வெயிலால் கடும் அவதிப்படுகிறார்கள். எல்லா இடங்களிலும் அவர்களால் முடிந்த தண்ணீர் பந்தல் உள்ளிட்ட விஷயங்களை செய்து உதவி செய்து வருகிறார்கள். இதில் தமிழக வெற்றிக் கழகம் தான் எங்கு திரும்பினாலும் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக தண்ணீர் பந்தல் கொடுத்திருக்கிறார்கள். 


இந்த நிகழ்வில் பங்கேற்றது திடீரென வந்த அழைப்பு தான். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பங்கேற்றுள்ளேன். நட்பு ரீதியாக தளபதி விஜய் நல்ல விஷயம் எது பண்ணாலும் அங்கு நான் இருப்பேன் என ஏற்கனவே சொல்லியிருந்தேன். நிறைய விஷயங்கள் பண்றாங்க. ரொம்ப சந்தோசமா இருக்குது. தமிழக வெற்றிக் கழகத்தில் இளைஞர்கள் துடிப்புடன் செயல்படுகிறார்கள். எஸ்.ஏ.சந்திரசேகரும், விஜய்யும் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்கள். அதற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக இந்நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த கட்சியின் இணைவேனா என்பது எதிர்காலத்தில் இணைந்து பயணிக்கும்போது தெரியும். 


தொடர்ந்து 3 ஆண்டுகால திமுக ஆட்சி பற்றி பேசிய தாடிபாலாஜி, “அவர்களும் நன்றாக தான் பண்ணுகிறார்கள். எந்த ஆட்சி வந்தாலும் தலைவர்கள் போய் எதாவது பண்ணுங்க என சொல்வது இல்லை. மக்கள் எதாவது செய்வதால் அவர்களுக்கு கெட்ட பெயர் ஆகிவிடுகிறது. அவங்களுடைய பணியை சரியாக செய்கிறார். மக்கள் அவர்களுக்கு தேவையானதை அரசிடம் இருந்து தேவையானதை வாங்கிக்கொண்டு அவர்களை திட்டுவது தவறான ஒன்றாகும். நான் எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் அவர்களுடன் பயணிக்க ரெடி” என தெரிவித்துள்ளார்.