சமீபகாலமாக தெருநாய்கள் விவகாரம் இந்திய அளவில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. அண்மையில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி டெல்லியில் தெருநாய்களை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கையெடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் சின்னத்திரை முதல் திரை பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தெருநாய்களை காப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இது ஒருபுறம் இருக்க தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் தெருநாய்களை அப்புறப்படுத்த குரல் கொடுத்து வருகின்றனர்.
தெருநாய்களுக்கு ஆதரவாக நடிகைகள்
இப்படி ஒவ்வொரு நாளும் இந்த விவகாரம் விஷ்வரூபம் எடுத்து வருகிறது. அண்மையில் தனியார் நிகழ்ச்சியில் தெருநாய் தொடர்பாக நடந்த விவாதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில், நடிகர், மிமிக்ரி ஆர்டிஸ்டுமான படவா கோபி தெருநாய்களுக்கு ஆதரவாக பேசியது சர்ச்சையானதால் மன்னிப்பு கோரினார். அதைத்தொடர்ந்து சீரியல் நடிகை அம்மு நீயா நானா நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். நாங்கள் பேசியது ஒன்று, அந்த நிகழ்ச்சியில் வந்தது வேறு என்ற குற்றச்சாட்டை வாத்தார். மேலும், சமூகவலைதளங்களில் தெருநாய்களை ஆதரிப்பவர்களை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நாய்கள் வளர்ப்பதில் என்ன தவறு?
ஆனால், யாரும் தெருநாயால் பாதிக்கப்படுவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை, உயிர் பழி நிகழ்ந்திருக்கிறது, சிறு குழந்தைகள் பலியாகியிருக்கிறார்கள் என்றும் நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் தெருநாய் பிரச்னை குறித்து பேசியுள்ளார். அதில், நாய் வளர்ப்பதில் என்ன தவறு? யாருக்கு எதை பிடித்திருக்கிறதோ அதை வளர்க்கட்டும். நான் எனது வீட்டில் 3 நாய்களை வளர்க்கிறேன். வளர்ப்பு நாய்களுக்கு உணவளிக்கும் போது தெருநாய்கள் அந்த பக்கம் வந்தால் அதற்கும் சேர்த்து வைப்பேன். ஆனால், தெருநாய்கள் மனிதர்களை கடிப்பதை ஏற்க முடியாது. அதை கட்டுப்படுத்த சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என கூறியுள்ளார்.