’இன்று நேற்று நாளை’, ’அயலான்’ படங்களின் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருவதாகவும், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


சைண்டிஸ்டாக சூர்யா!


இயக்குநர் விக்ரம் குமாரின் ‘24’ படத்தில் சூர்யா ஏற்கெனவே சைண்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், தற்போது இந்தப் படத்திலும் சைண்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் படத்தின் முக்கியக் காட்சிகள் சென்னையில் பிரம்மாண்ட செட்கள் அமைத்து படமாக்கப்பட உள்ளதாகவும், படத்தின் ஹீரோயின் கதாபாத்திரத் தேர்வு இனி தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




 இயக்குநர் ஆர்.ரவிக்குமார், டைம் ட்ராவலை மையப்படுத்தி வெளிவந்த ’இன்று, நேற்று, நாளை’, சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் அறிவியல் படமான அயலான் ஆகிய படங்களின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆஸ்கர் அகாடெமி அழைப்பு விடுத்துள்ள தென்னிந்தியாவின் முதல் நடிகர்


முன்னதாக The Academy of Motion Pictures Arts and Sciences என்ற ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அமைப்பில் உறுப்பினராவதற்கு நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


397 பேருக்கு இந்த அமைப்பு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அழைப்பைப் பெற்றுள்ள  தென்னிந்திய மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முதல் நபர் என்னும் பெருமையை சூர்யா பெற்றுள்ளார். 


நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடெமி அழைப்பு விடுத்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் ட்வீட்


ட்விட்டரில் சூர்யாவை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும் சமூக அக்கறை கொண்ட கதைத் தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக  ’த அகாடெமி’ விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யாவுக்கு எனது பாராட்டுகள். வானமே எல்லை!” என வாழ்த்தியுள்ளார்.






சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் கடந்த ஆண்டுகளில் சர்வதேச கவனத்தை ஈர்த்து ஆஸ்கர் விருதுகளுக்கு ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


அடுத்தடுத்த படங்கள்


முன்னதாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்து சூர்யா பெரும் பாராட்டுக்களைப் பெற்ற நிலையில், தொடர்ந்து சுதா கோங்கரா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் இந்தியில் தயாராகி வரும் சூரரைப் போற்று ரீமேக்கில் மீண்டும் கேமியா ரோலில் நடித்துள்ளார். மேலும் மாதவன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ராக்கெட்டரி படத்திலும் சூர்யா கௌரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


மேலும், ஹீரோவாக பாலா இயக்கும் படத்தில் நடித்து வரும் சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும், சிவா இயக்கும் படத்திலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.