கமல்ஹாசன், பஹத்பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த 3-ந் தேதி வெளியாகியது விக்ரம் திரைப்படம். இந்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் பிரபல நடிகர் சூர்யா கொடூர வில்லனாக வந்து அசத்தியிருப்பார். அவர் ஏற்று நடித்துள்ள ரோலக்ஸ் கதாபாத்திரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டுவிட்டரில் ரோலக்ஸ் மற்றும் ரோலக்ஸ் சார் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
சூர்யாவின் வருகை ரசிகர்களுக்கு படத்தை பல மடங்கு கொண்டாடவைத்துள்ளது. மேலும், படத்தின் முடிவு கைதி 2ம் பாகம் மற்றும் விக்ரம் 3ம் பாகத்தின் தொடர்ச்சி போலவே காட்டப்பட்டிருப்பது ரசிகர்களை மேலும் குஷியாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சூர்யாவிடம் இயக்குனர் லிங்குசாமி நீங்களும், கார்த்தியும் எப்போது இணைந்து நடிப்பீர்கள்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சூர்யா நான் அமைதியான வில்லனாகவும், கார்த்தி பட்டை போட்ட ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை கூறினார்.
இதைப்போலவே, கைதி படத்தில் நடிகர் கார்த்தி பட்டை போட்டு ஒரு கிராமத்து நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் எனும் கொடூர வில்லன் கெட்டப்பில் கடைசி கட்டத்தில் மிரட்டியிருப்பார். கைதி, விக்ரம் படங்களுக்கு கனெக்ஷன் இருப்பது போலவே இயக்குனர் படத்தை முடித்திருப்பதால் நிச்சயம் இதன் தொடர்ச்சி பாகங்களில் சூர்யா கூறியபடி தனது வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
சூர்யா அன்று சொன்ன வார்த்தை, ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அன்றே கணித்த சூர்யா என்று தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் உள்ளிட்ட நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய பல விஷயங்களை அன்றே கணித்தார் சூர்யா என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைரலாகியது எனபது குறிப்பிடத்தக்கது. தற்போது, ரோலக்ஸ் கதாபாத்திரமும் அன்றே கணித்த சூர்யா என்று வைரலாகி வருகிறது.
சூரரைப் போற்று, ஜெய்பீம் என்ற மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்த சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு அடுத்து தற்போது அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும், பாலா இயக்கத்தில் கடலோடி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு அவர் லோகேஷ் கனகராஜூடன் மிரட்டலான ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்காக மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்