விக்ரம் படத்தில் நடித்துள்ள சூர்யாவுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் அவரது பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படமானது உலகளவில் வசூலில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கமல் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் படத்தில் 5 நிமிடமே வந்தாலும் சூர்யாவின் கேரக்டர் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேலும் விக்ரம் படத்தில் லோகேஷின் முந்தைய படமான கார்த்தி நடித்திருந்த கைதி படத்தை லிங்க் செய்யும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
ஏற்கனவே விக்ரம்-3 படத்தில் சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதை கமல் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தில் கைதி படத்தின் கார்த்தியின் டில்லி கதாபாத்திரம் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கைதி படத்தின் 2வது பாகம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் கைதி, விக்ரம் ஆகிய படங்களின் கதைகளை ஒன்றிணைத்து இந்த படம் முழு வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனது தம்பி கார்த்திக்கு வில்லனாக நடிப்பார் என ஏற்கனவே 8 ஆண்டுகளுக்கு முன் சூர்யா தெரிவித்திருந்தார். சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் இயக்குநர் லிங்குசாமி, சூர்யாவிடம் சினிமாவில் எப்போது இணைவதை எதிர்பார்க்கலாம் என கேட்டார்.
அதற்கு நான் அமைதியான வில்லனாகவும், கார்த்தி நெற்றியில் பட்டையெல்லாம் போட்டுகிட்டு நல்ல பையனாகவும் இருந்தால் ஒரு படம் நடிக்க தயார் என தெரிவித்திருந்தார். அதன்படி கைதி படத்தில் கார்த்தி நெற்றியில் பட்டையுடன் இருப்பது போலவும், சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் போட்டோவும் இணைத்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இதன்மூலம் ஏற்கனவே பல நிகழ்வுகளை முன்கூட்டியே தனது படங்களில் கணித்ததாக பாராட்டப்பட்ட சூர்யாவின் கணிப்பு இம்முறையும் பொய்யாகாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்