நடிகர் சிவகுமாரின் கலை மற்றும் சமூகப் பணியை பாராட்டு விதமாக நடிகர் சிவகுமாருக்கு தமிழ்நாடு அரசு சார்பாக கெளரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது தந்தை சிவகுமார் குறித்து  நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களை கவர்ந்துள்ளது 

Continues below advertisement

சிவகுமாருக்கு முனைவர் பட்டம்

ஓவியம், நடிப்பு , சிறந்த பேச்சாற்றல் என பன்முகத் தன்மைக் கொண்ட நடிகர் சிவகுவார். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார் மற்றும்  ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் முக ஸ்டாலின் சிவகுமாருக்கு இந்த பட்டத்தை வங்கினார். இதுகுறித்து சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்

சிவகுமார் மகன் என்பதே என் அடையாளம்

ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா. ஒரு புள்ளியில் தொடங்கும் கோடு எவ்வளவு நுட்பமாக ஓவியமாக மாறுகிறதோ அதைப் போலவே தன் வாழ்வையும் நெறியும் நேர்த்தியுமாய் வகுத்துக் கொண்டவர். ஒரு கிராமத்திலிருந்து கிளம்பி வந்து, கலையுலகின் கவனம் திருப்பி, எல்லோருக்குமான முன்னுதாரணமாக மாறிய அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் என்பது மிகப் பொருத்தமானது. எள்ளளவும் நெறிபிறழாத அவர் வாழ்க்கைக்கும் திறமைக்கும் வாய்த்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்.

Continues below advertisement

சிறுவனாக இருந்த காலம்தொட்டு இன்று வரை அப்பாவின் ஆச்சர்ய உயரங்களைக் கண்டு வியக்கும் நான், அவரது உறுதி, உழைப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றையே எனக்கான பாடமாகக் கொள்கிறேன். அவரது சாதனைகளைவிட அவரது வாழ்வியல் விழுமியங்களே ( Life Values ) என் வாழ்க்கையையும் எண்ணங்களையும் செதுக்கி இருக்கின்றன. 'சிவகுமார் அவர்களின் மகன்' என்பதே என்றைக்கும் எனக்கான அடையாளம்; என் வாழ்நாளுக்கான அங்கீகாரம்.

எங்கள் தந்தையின் 60 ஆண்டுகாலப் பயணம் தமிழ்ச் சமூகத்திற்குப் பயன்பட்டிருப்பதன் அங்கீகாரமாகவே இந்த முனைவர் பட்டத்தைக் கருதுகிறோம். இந்தத் தருணத்தில் மதிப்பிற்குரிய ஓவியர் திரு சந்துரு (எ) குருசாமி சந்திரசேகரன் அவர்களுக்கும் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் எங்களுக்குக் கூடுதல் மகிழ்வைத் தருகிறது. இருவருக்கும் மகத்தான கெளரவத்தை வழங்கிய தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்திற்கும், இச்சிறப்பை முன்னின்று வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பிலும், எல்லோர் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என சூர்யா தெரிவித்துள்ளார்