சூரரைப்போற்று திரைப்படத்தில், "ஏர் ஓட்டுறவனும் ஏரோ பிளேன்ல போயாச்சு... இனியும் போவாய்ங்க... ஏய் வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா..”. இந்த வசனங்களை நம்மில் பலராலும் மறக்கமுடியாது. சராசரி மனிதனின் விரக்தி, உளைச்சல், வருத்தம், ஏக்கம், புரட்சி போன்ற பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. மேலும், நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், " மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்" என்று தெரிவித்தார். இதில், சூர்யாவின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் மிகவும் வலிமையானது. நீட் தேர்வு விவகாரத்தில், சமகால அரசியல் தலைவர்கள் கூட இத்தகைய விரக்தியை வெளிபடுத்தவில்லை.
அதாவது, சமீப காலங்களில் நிஜ வாழக்கையிலும், திரை வாழ்க்கையிலும் சூர்யா தான் யார் என்பதையும், எதனை எதிர்க்க நினைக்கிறார் என்பதையும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளார்.
சினிமா- அரசியல் ஒருங்கிணைப்பு:
தென்னிந்தியாவில் சினிமாவும், அரசியலும் ஒருங்கே பயணிக்கிறது என்ற கூற்று உண்டு. உதாரணமாக, தெலுங்கில் என். டி ராமாராவ் (தமிழில் ரஜினிகாந்த்) அநேக வெற்றிப்படங்கள் அனைத்தும் ஹிந்தியில் அமிதாப் பச்சனின் ரீமேக் படங்கள்தான். இருப்பினும், வடமாநிலங்களில் விளிம்பு நிலை மக்களுக்கான கோபமான ஹீரோ என்று உருவகப்படுத்தப்பட்ட அமிதாப் பச்சனால் அரசியல் ஆதிக்கம் சொல்லும்படி இருக்கவில்லை. ஆனால், என்.டி ராமா ராவின் (கிட்டத்தட்ட, ரஜினிகாந்த) அரசியல் ரீதியான தாக்கங்கள் மிகவும் அதிகம். எனவே, இங்கு கதாநாயகர்கள் மட்டும் உருவாகுவதில்லை, அரசியல் தலைவர்களாகவும் பரிணாமம் கொள்கின்றனர்.
இருப்பினும், தென்னிந்தியா சினிமா சிலரை மட்டுமே அரசியல் கதாநயாகனாக உருமாற்றியுள்ளது. அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதற்கு சரியான திறப்பு வாசல் இல்லை என்பதை சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராமராஜன், பாக்கியராஜ், கார்த்திக், சரத்குமார், சுரேஷ் கோபி, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஆகியோரின் வாழ்க்கை குறிப்புகளில் இருந்து நம்மால் உணர முடிகிறது.
எம்.ஜி.ஆர் தனது அரசியலுக்குத் தேவையான சினிமாக்களை மட்டுமே முதன்மைப்படுத்தினார் (அரசியல் சினிமாவை தீர்மானித்தது) . சினிமாவை ஒரு கலையாகவே எம்.ஜி.ஆர் அணுகவில்லை. உதாரணமாக, 1977ல் முதல்வர் பதவியேற்ற போது, செய்தியாளர்களிடம் பேசிய எம். ஜி. ஆர், முதல்வர் ஆனால் என்ன செய்வேன் என்பதை “நாடோடி மன்னன்” படத்திலே தெரிவித்துவிட்டேன்” என்று குறிப்பிட்டதையும் இங்கு நாம் நினைவுகொள்ள வேண்டும். திரைக்கதையில் வில்லன் நம்பியாரை வெல்லும்போது, அப்போதைய திமுக தலைவர்களை எம்.ஜி.ஆர் வென்றதாகவே அவரது ரசிகர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினர். அதவாது, தனது அரசியல் நண்பர்களையும், எதிர்களையும் சினிமாவின் மூலம் எம்.ஜி.ஆர் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
ஆனால், ரஜினியின் அரசியலை அவரது சினிமா தீர்மானித்தது. அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான தனது அறிக்கையில், "சினிமாவில் பெற்ற பேர், புகழைவைத்து மக்களுக்காக நல்லது செய்ய விரும்புகிறேன்" என்றுதான் தெரிவித்தார். படையப்பா, அண்ணாமலை ஆகிய படங்களைத்தாண்டி ரஜினி சினிமாவின் மூலம் தனது அரசியல் நண்பர்களையும், எதிரிகளையும் தொடர்ச்சியாக ரசிகர்களுக்கு புரிய வைக்கவில்லை.
சூர்யாவின் சினிமா - அரசியல்:
தமிழ் சினிமாவின் விஜய், அஜித் போன்ற மற்ற சமகால நடிகர்களை விட தமிழ் சமூகத்தை பற்றிய கற்பனை சூர்யாவிடம் அதிகமுள்ளதாக பார்க்கப்படுகிறது. தமிழ் சமூகத்தின் அடிப்படை என்ன? என்ற கேள்விக்கு பதில்தேடக் கூடிய தைரியமும் அவரிடம் உண்டு. சூர்யாவின் ஏழாம் அறிவு, மாஸ் என்கிற மாசிலாமணி (ஈழத்தமிழ் கதாபாத்திரம் ), காப்பான், என்ஜிகே, சூரரைப்போற்று, காப்பான் , ஆயுத எழுத்து போன்ற பல்வேறு திரைப்படங்களில் மூலம் சூர்யாவின் அரசியல் குறித்த நிலைபாடுகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
ஏழாம் அறிவு திரைப்படத்தில் தமிழர் பெருமை, அறிவுமுறை, மரபியல் அறிவு பற்றிய சொல்லாடல்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்த அறிவுமுறையை உருவாக்கிய, விளிம்புநிலை மக்களைப் பற்றிய சொல்லாடல்கள் மிகவும் குறைவானதாக இருக்கும். உண்மையில், ஏழாம் அறிவு படத்தில் அடித்தட்டு விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் போராட்டங்கள் குற்றத்தன்மையாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், சூரரைப்போற்று படத்தில் .... இதுதான் என் கலாச்சாராம், என் பண்பாடு, என் சமூகநிலை .... நான் உனக்கு குறைந்தவன் இல்லை என்ற சொல்லாடல்கள் சூர்யாவின் அரசியல் மாற்றங்களை பிரதிபலிப்பதாகவே உள்ளன. நிஜ வாழ்கையில் நீட் தேர்வை எதிர்க்கும் சூர்யாவும், சூரரைப் போற்று திரைப்படத்தில் வரும் நெடுமாறன் கதாபாத்திரமும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
’அகரம்’ தொடங்கி கல்வியைப் பிரதானப்படுத்தும் நடிகன் சூர்யா. உங்களின் நல்நோக்கங்களும், கனவுகளும் நிறைவேறட்டும் சூர்யா..!