தன்னை விட கார்த்தி தான் சினிமாவுக்கு அதிக மரியாதை கொடுப்பார் என ஜப்பான் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா தெரிவித்தார். 


ராஜூ முருகன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ஜப்பான்”. இந்த படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், வாகை சந்திரசேகர், சுனில் வர்மா, விஜய் மில்டன், கே.எஸ்.ரவிகுமார், பவா செல்லத்துரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜப்பான் படம் தீபாவளி வெளியீடாக தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் இப்படம் கார்த்தியின் 25வது படமாகும்.


இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று (அக்டோபர் 28) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூர்யா, தமன்னா, சத்யராஜ், சிபிராஜ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா, ஹெச்.வினோத், சுசீந்திரன், பா.ரஞ்சித், பி.எஸ்.மித்ரன், முத்தையா உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கார்த்தி பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.


மேலும் ஜப்பான் பட ட்ரெய்லரை நடிகர் சூர்யா  வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “கார்த்திக்கு இப்படி ஒரு அடையாளத்தை கொடுத்த அத்தனை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், ரசிகர்கள், ஊடகத்தினர் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரு 20 வருஷம் முன்னாடி போக வேண்டும். கமல் பூஜை போட்டு ஆரம்பித்து வைத்த படம். அப்படத்தை பார்த்து விட்டு ரஜினி, “எல்லோருக்குமே வாழ்க்கையில அடிக்கடி வாய்ப்பு கிடைக்காது. கிடைச்சதை கார்த்தி சரியா பயன்படுத்திட்டாரு” என சொல்லி வாழ்த்தினார். 


ஒரு அண்ணனாக என்னை விட கார்த்தி இப்படி இருக்க 4 பேர் தான் காரணம்  மணிரத்னம் கிட்ட ஆரம்பிச்ச விதை என்பதால் அவருக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். அடுத்ததாக ஞானவேல் தான் கார்த்தியோட இந்த பயணத்துக்கு காரணம். பருத்தி வீரன் கொடுத்த இயக்குநர் அமீருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நானும், கார்த்தியும் அப்பப்ப பேசிப்போம். மூச்சு வாங்குதுல, கால் ஜான் வயித்துக்கு இப்படி கஷ்டப்படுறதை விட 4 பன்னிகுட்டி வாங்கி வேலை பார்க்கலாம்ல அப்படின்னு நினைப்போம்.


எங்களுக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களை கொடுக்க  ரசிகர்கள் தான் காரணம். கார்த்தியை நடிக்க வந்த அப்புறம், என்னிடமே வந்து நான் உங்க தம்பி ஃபேன், உங்களை விட அவரைத் தான் பிடிக்கும் என சொல்லும்போது கொஞ்சம் பொறாமையாக இருக்கும். வீட்டில் வந்து சினிமா பத்தி அதிகமா நினைக்கிறதும், அதிகமாக மரியாதை கொடுக்குறதும் கார்த்தி தான். நான் பி.காம் படிச்சிட்டு பிசினஸ்லாம் பண்ணிட்டு தான் சினிமாவுக்கு வந்தேன். 


ஆனால் கார்த்தி தான் இஷ்டப்பட்டு என்ன பண்ண வேண்டுமோ அதற்காக காத்திருந்து இந்த இடத்துக்கு வந்துருக்கார். அதற்கு உண்மையாக இருக்கிறார். கார்த்தி நினைச்சி இருந்தா 16 வருஷத்துல 50 படம் பண்ணிருக்கலாம்.  ஆனால் ஒரு படத்துக்கு இவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், இந்த மாதிரி படங்கள் தான் பண்ண வேண்டும் என நினைத்ததால் தான் 25வது படத்தை கொண்டாடி கொண்டு இருக்கிறோம். அவரால் இப்படி எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க முடிகிறது என ஆச்சரியப்பட்டுள்ளேன்” என நடிகர் சூர்யா தெரிவித்தார்.