தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியாகி, 90ஸ் கிட்ஸ் களின் பேவரட் படங்களில் ஒன்றாக உள்ள உன்னை நினைத்து படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


விஜய்க்கு பதிலாக சூர்யா


90களில் நடிக்க வந்து தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணியில் உள்ள நடிகர்களான விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு இயக்குனர் விக்ரமன் கொடுத்த படங்கள் திருப்புமுனையாக அமைந்தது. விக்ரமன் இயக்கத்தில் விஜய் பூவே உனக்காக படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். அதைப்போல் அஜித் சிறப்பு வேடத்தில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நடித்தார்.  


இப்படியான நிலையில் 2002 ஆம் ஆண்டு மீண்டும் விஜயை வைத்து விக்ரமன் ஒரு காதல் கதையை தயார் செய்தார். அந்தப் படம் தான் உன்னை நினைத்து. ஒரு நாள் ஷூட்டிங் சென்ற நிலையில் இந்தப் படத்தில் இருந்து விஜய்  விலக அதற்கு பதிலாக நடிகர் சூர்யா கமிட்டானார். சூர்யாவுக்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். இந்தப் படத்தில் சூர்யா லைலா,சினேகா,பிரேம்ஜி,மயில்சாமி,ரமேஷ் கண்ணா, சார்லி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 



அதே காதல்.... அதே கதை


90களில் வெளியான விக்ரமன் படங்களில் ஒரே வகையான பேட்டர்ன் இடம் பெற்றிருக்கும். பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படங்களை எடுத்துக் கொண்டால், ஹீரோவின் காதல் நிறைவேறுகிறதோ இல்லையோ அவர் காதலிக்கும் பெண்ணின் ஆசை அவரால் நிறைவேற்றப்படும். இப்படியான காட்சிகளை நாம் பார்த்து மகிழ்ந்திருக்கலாம். அதே கதையை சிறிது மாற்றம் செய்து உன்னை நினைத்து படத்தில் கொடுத்தார் விக்ரமன். 


அதாவது லாட்ஜ் ஒன்றில் வேலை பார்க்கும் சூர்யாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் லைலாவுக்கும்  காதல் ஏற்படுகிறது. ஆனால் வசதியான வாழ்க்கை தேடி லைலா காதலை வர காதலை உதறிவிட்டு செல்கிறார். இதற்கிடையில் லாட்ஜுக்கு புதிய மேனேஜரின் மகளாக வரும் சினேகாவுக்கு சூர்யாவின் கதை தெரிந்து அவர் மீது காதல் ஏற்படுகிறது. இதற்கிடையில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சென்ற லைலா அதில் ஏமாந்து போய் மீண்டும் ஏழ்மையான வாழ்க்கையை நோக்கி நகர்கிறார். இதனை தெரிந்து கொண்ட சூர்யா அவரது குடும்பத்திற்கு உதவி செய்வதோடு லைலாவின் மருத்துவர் கனவையும் நிறைவேற்றிக் கொடுக்கிறார். இதனால் லைலாவுக்கு மீண்டும் சூர்யா மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் இம்முறை அவரின் காதலை ஏற்காமல் தனக்காக சினேகா காத்திருப்பதாக கூறிவிட்டு அவருடன் செல்வது போல் வித்தியாசமான கிளைமேக்ஸ் காட்சியுடன் இப்படம் பெற்றிருந்தது. 



எவர்கிரீன் பாடல்கள்


உன்னை நினைத்து படத்திற்கு மிகப்பெரிய பலமாக பாடல்கள் அமைந்தது. சிற்பி இசையில் உருவான பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக உள்ளது. குறிப்பாக என்னை தாலாட்டும் தென்றல், பொம்பளைங்க காதல், யார் இந்த தேவதை, ஹாப்பி நியூ இயர் போன்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது.  


2002 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மாநில அரசின் விருதுக்கான பட்டியலில் உன்னை நினைத்து படம் சிறந்த படம், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என நான்கு விருதுகளை பெற்றது. அதேசமயம் சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை நடிகர் சினேகா பெற்றார். 


இப்படி 21 ஆண்டுகளை கடந்து விட்ட உன்னை நினைத்து படத்தை இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தாலும் டிவி முன் உட்கார்ந்து பார்க்கும் கூட்டம் அதிகம். அந்த அளவுக்கு காதலை வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.