நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 


இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி நடிகையாக தமிழில் அறிமுகமாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. 


இந்த படத்தில்  13 விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, நட்டி என்கிற நட்ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் கங்குவா படம் உருவாகியுள்ளது. இந்தாண்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் வெளியான நிலையில் ஜூலை மாதம் 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளன்று அவரது கேரக்டரின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.


இதில் தில் மிரட்டும் லுக்கில், வித்தியாசமான கிராபிக்ஸ் என பலவகையான அம்சங்களும் இடம் பெற்றதால் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். இதன்பின்னர் சூர்யா குதிரையில் வருவது போல காட்சி கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசானது.  கடந்த ஜனவரி 11  ஆம் தேதி தனது ஷூட்டிங் காட்சிகளை சூர்யா முடித்து விட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கங்குவா படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் ஜனவரி 16 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியானது. 






இப்படியான நிலையில் பாபி தியோல் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் உத்திரன் என்னும் கேரக்டரில் பாபி தியோல்  நடிக்கிறார். அவரின் கேரக்டரின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் இரக்கமற்ற, சக்தி வாய்ந்த, மறக்க முடியாத எங்கள் உத்திரன் பாபி தியோலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளது.