பைனான்ஸ் பிரச்னையால் ரிலீசாகாமல் இருந்த சூர்யாவின் கருப்பு படம் ஒருவழியாக இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் “கருப்பு”. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி, யோகிபாபு, ஸ்வாசிகா, ஷிவதா என பலரும் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படம் பல பிரச்னைகளால் பல மாதமாக ரிலீசுக்கு தயாராக இருந்தும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அந்த பிரச்னை தீர்க்கப்பட்டு மே 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சில தினங்களுக்கு முன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த டிக்கெட் விற்பனையும் மும்முரமாக நடந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்னை காரணமாக இப்படம் திட்டமிட்டபடி நேற்று வெளியாகவில்லை. இதனால் நள்ளிரவு முதலே தியேட்டரில் காத்திருந்த ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கண் கலங்கி வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் ஒருவழியாக பிரச்னை தீர்க்கப்பட்டு கருப்பு படம் இன்று முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது.
இதுதொடர்பாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “சில பயணங்கள் காலத்தை மட்டுமல்ல, இதயத்தையே சோதிக்கின்றன. அப்படியாக கருப்பு படத்திற்காகக் காத்திருந்த, படம் பற்றித் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த, அமைதி மற்றும் தாமதங்களுக்கு மத்தியிலும் எங்கள் மீது நம்பிக்கை இழக்காத ஒவ்வொருவரிடமும் நாங்கள் மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டுள்ளோம். அதைவிட முக்கியமாக நாங்கள் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தக் காத்திருப்பு வேதனையானது என்பதை நாங்கள் அறிவோம். உங்களில் பலர் இந்தப் படத்தை மிகுந்த அன்போடும் ஆவலோடும் எதிர்பார்த்திருந்தீர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். ஒவ்வொரு தாமதமும் எங்கள் மீதும் பெரும் சுமையாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு பின்னடைவின் போதும், உங்கள் ஆதரவும், உங்கள் செய்திகளும், உங்கள் நம்பிக்கையும், உங்கள் எல்லையற்ற அன்பும்தான் இந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தன.
நிறைந்த இதயங்களுடனும் நன்றிக் கண்ணீருடனும், நாங்கள் இறுதியாகச் சொல்கிறோம். கருப்பு படம் இன்று உலகெங்கிலும் வெளியாகிறது. இந்தப் படம் எங்கள் ரத்தம், வியர்வை, தூக்கமில்லாத இரவுகள், போராட்டங்கள் மற்றும் உணர்ச்சிகளைத் தாங்கி வருகிறது. இது இனி எங்கள் கதை மட்டுமல்ல - இந்தப் பயணத்தில் எங்களுடன் துணை நின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. காத்திருந்ததற்கு நன்றி. நம்பியதற்கு நன்றி. திரையரங்குகளில் சந்திப்போம்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், எங்களுடன் இருந்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
