தமிழ் திரையுலகம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த கங்குவா திரைப்படம் இன்று உலகெங்கும் திரையரங்கில் வெளியானது. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 ஆயிரம் தியேட்டர்களில் கங்குவா:


இந்த படம் தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகியது. உலகெங்கும் 14 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகியுள்ள இந்த படத்திற்காக படக்குழுவினர் கடந்த ஒரு மாத காலமா தீவிர ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இதனால், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் இன்று திரையரங்கில் வெளியானது. இணையதள வளர்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்கள் அதீத வளர்ச்சி அடைந்துள்ளன. சமூக வலைதளங்களில் எந்தவொரு நிகழ்வையும் உடனுக்குடன் தெரிந்து கொள்வது போல, சமூக வலைதளங்களில் பதியப்படும் கருத்துக்களும் ரசிகர்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

வரவேற்பும், வன்மமும்:


இந்தியாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் வெளியாகும் தினங்களில் சமூக வலைதளங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில் அந்த படங்களின் பெயர்களுடன் ப்ளாக்பஸ்டர் என்ற ஹேஷ்டேக்கும், டிசாஸ்டர் என்ற ஹேஷ்டேக்கும்  ட்ரெண்ட் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. கங்குவா திரைப்படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.


கங்குவா படம் வெளியானது முதலே எக்ஸ் தளத்தில் கங்குவா ப்ளாக்பஸ்டர் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக் கீழே ரசிகர்கள் கங்குவாவை கொண்டாடும் காட்சிகளும், படத்தை பாராட்டும் விமர்சனங்களும் இடம்பெற்று வருகிறது. அதேபோல, First Half என்ற ஹேஷ்டேக்கில் கங்குவா படத்தை கேலி செய்தும், விமர்சித்தும் கருத்துக்களையும், மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.


குறிப்பாக, தென்னிந்தியாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் திரைப்படங்கள் பலவும் சமீபகாலமாக இந்த பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. படத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதை காட்டிலும் அதில் நடித்திருக்கும் நடிகர்கள் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமான கருத்துக்களும், மீம்ஸ்களும், காட்சிகளும் அதிகளவு பரபரப்பப்படுகிறது. இது படத்தின் மீதான வசூலையும், படத்தின் மீதான பாசிட்டிவ் விமர்சனங்களையும் பாதிக்கிறது.


ALSO READ | Kanguva Review in Tamil: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ


வசூல் வேட்டை நடத்துவானா கங்குவா?


சமீபகாலமாக வௌியான கோட், வேட்டையன், கல்கி என பல படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். பெரிய நடிகர்களின் படங்களே இதுபோன்ற நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஆனாலும், நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் இந்த விமர்சனங்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வசூலில் வேட்டை நடத்துகிறது.


கங்குவா படமும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் சமூக வலைதளங்களில் ஆதரவான வரவேற்பையும், எதிர்மறையான கருத்துக்களையும், கேலிகளையும் சந்தித்து வருகிறது. கங்குவா படம் சமூக வலைதள விமர்சனம் மற்றும் கேலிகளை கடந்து மிகப்பெரிய வெற்றி படமாக அமையுமா? என்பதை அடுத்தடுத்த நாட்களில் காணலாம்.