ஒவ்வொரு முறை நடிகர் சூர்யாவின் திரைப்படம் வெளியாகும்போதும் தனது வசீகர நடிப்பாலும், தனித்துவமான தோற்றத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். கடந்த ஆண்டு சூரரைப்போற்று படத்தின் மூலம் வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா என கேள்வி எழுப்பிய சூர்யா, தற்போது ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் சட்டம் அனைவருக்கும் சமம் என பேச வருகிறார்.


சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா இப்படத்தில் காவல்துறையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நீதிபெற்று கொடுத்த உண்மை கதையில் நடித்துள்ளார். சாதி வெறிக்கு எதிரான  அழுத்தமான வசனங்களுடன்  வெளியாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி பட்டையை கிளப்பியது.



இந்நிலையில் படம் பேசும் கஷ்டத்தை வெறும் திரையோடு மட்டும் நின்றுவிடாமல் நிஜத்திலும் மாற்ற நினைத்துள்ளார் சூர்யா. அதாவது,  ஜெய்பீம் படம் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளை பேசுகிறது. அதன்படி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக 2டி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி வழங்கியுள்ளார் சூர்யா. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்க்கா ஸ்டாலினை நேரில் சந்தித்த சூர்யாவும் - ஜோதிகாவும் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர். அவர்களுடன் ஓய்வுபெற்ற நீதிபதியும் உடன் இருந்தார்.


கடந்த 24 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வரும் சூர்யாவின் ஜெய் பீம் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி இருக்கிறது. ஜெய் பீம் சவாலானதாக இருந்ததாக நடிகர் சூர்யா தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “நான் எனது 24 ஆண்டுகால திரைத்துறை பயணத்தில் பல்வேறு உயரங்களை பல சறுக்கல்களையும் சந்தித்து இருக்கிறேன். எல்லா தருணங்களின் எனது ரசிகர்களும், சினிமா விரும்பிகளும் என்னுடன் துணை நின்றனர். அவர்கள் என் மீது அதிக நம்பிக்கை வைத்து உள்ளார்கள். என் மீதான அவர்களின் நம்பிக்கை என்பது எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு அழகிய உறவை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் என் மீது காட்டி வரும் அன்புக்கு பகரமாக நல்ல படங்களை அவர்களுக்கு திருப்பி அளிக்க விரும்புகிறேன்.” என்றார்.




ஜெய் பீம் படம் தான் நடித்த மற்ற படங்களில் இருந்து வித்தியாசமானது. இந்த படம் நான் இதற்கு முன் நடித்து உள்ள எந்த படத்தின் சாயலிலும் இருக்காது என அவர் கூறியுள்ளார். “ஜெய் பீம் படத்தில் சொல்லப்பட்டு உள்ள கதை, நடித்துள்ள நடிகர்கள், அதில் காட்டப்பட்டு இருக்கும் உணர்வுகள், என ஒட்டுமொத்த படமும் அழுத்தமானதாக இருக்கும். இது வெறும் சாதாரணமான பொழுதுபோக்கு படம் இல்லை. ஆனால், இப்படம் உங்கள் மனதில் நிச்சயம் தாக்கத்தை உண்டாக்கும். பார்வையாளர்களுக்கு என்றும் நினைவில் இருக்கும் ஒன்றாக ஜெய் பீம் இருக்கும்.” என சூர்யா கூறியுள்ளார்.