மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவான “மாற்றான்” படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் 


இரட்டையர்கள் கேரக்டர்கள் கொண்ட படங்கள் என பார்த்தால் அள்ள அள்ள குறையாத அமுத சுரபி போல தமிழ் சினிமாவில் படங்கள் கொட்டும். ஆனால் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்ற விதமே புதிதாக இருந்தது. செய்திகளில் பார்த்த அந்த கேரக்டரை அசாத்தியமாக “மாற்றான்” படத்தில் உருவாக்கியிருந்தார் கே.வி.ஆனந்த். எந்த இடத்தில் இரண்டு கேரக்டர்களும் தனித்து தெரியாத அளவுக்கு இருந்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருந்தது. 


அயன் படத்தின் வெற்றிக்குப் பின் சூர்யா - கே.வி. ஆனந்த் கூட்டணி 2வது முறையாக இப்படத்தில் இணைந்தனர். காஜல் அகர்வால், சச்சின் ஹெடேக்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். 


படத்தின் கதை 


அகிலனும், விமலனும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இவர்களுக்கு உடல் உறுப்புகள் தனித்தனி என்றாலும் இதயம் ஒன்று தான். இதில் விமலன் சாந்த சொரூபி, அகிலன் முரட்டு தனமானவர். தன் தந்தை சச்சின் தொழிலில் செய்யும் தவறுகளை உக்வேனிய நாட்டு பெண் மூலம் விமலன் அறிந்துக்கொண்டு தட்டிக் கேட்கிறார். இதனால் அவரை கொலை செய்கிறார் தந்தை சச்சின் ஹெடேக்கர். இரட்டையர்கள் பிரிக்கப்பட்டு இதயம் அகிலனுக்கு பொருத்தப்படுகிறது. 


ஒரு கட்டத்தில் தன் தந்தை தான் சகோதரன் மரணத்துக்கு காரணம் என அகிலனுக்கு தெரிய வருகிறது. மேலும் அவர் செய்த தவறுகளை கண்டுபிடிக்க உக்வேனியா செல்லும் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கு உலக போட்டியில் வெற்றி பெற அந்நாட்டு வீரர்களுக்கு பாலில் எவரும் கண்டு பிடிக்க முடியாதவாறு ஊக்க மருந்து வழங்கப்படுவதால் மோசமாக நோய் வாய்பட்டு இறந்தது தெரிய வருகிறது. அதே மருந்து கலந்த மாவை தான் தந்தை இந்தியாவில் வியாபாரம் செய்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து அகிலன் என்ன முடிவு எடுக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும். 


எதிர்பார்ப்பை ஏமாற்றிய இரண்டாம் பாதி 


இந்த படம் முதல் பாதி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இரண்டாம் பாதி காட்சிகள் உக்வேனியா நாட்டில் நடப்பதாக காட்டப்பட்டதால் முழுக்க முழுக்க டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வையே ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. விமலன், அகிலன் ஆக ஒரு உடல் இரு உயிர், இரு கேரக்டர்கள் என வெரைட்டி காட்டியிருப்பார் சூர்யா. முதலில் விமலனின் காதலியாக வந்து, பின் அகிலனின் காதலியாக மாறி படம் முழுக்க டிராவல் செய்திருப்பார் காஜல் அகர்வால். அவரை ஒரு டிரான்ஸ்லேட்டராக பயன்படுத்தியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. 


ஹாரிஸ் இசையில் ரெட்டை கதிரே, நானி கோனி, தீயே தீயே, கால் முளைத்த பூவே என அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. வழக்கம்போல படத்தின் ஒளிப்பதிவு அருமையாக இருந்தது. மாற்றான் படம் தாய்லாந்தைச் சேர்ந்த இரட்டையர்களான யிங் மற்றும் சாங் ஆகியோரின் உண்மைக் கதையிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Bigg Boss Cool Suresh: எதுவும் சொல்றதுக்கு இல்ல பாஸ்... இந்த முறை கோல்ட் ஸ்டாரை தட்டித் தூக்கிய கூல் சுரேஷ்!