இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

Continues below advertisement


நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இந்தாண்டு ஹீரோவாக அவர் நடித்த எதற்கும் துணிந்தவன், கேமியோ ரோலில் நடித்த விக்ரம் ஆகிய படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ள அவர் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார். இதேபோல் பாலாவின் வணங்கான் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். 






சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெற்றது. இதேபோல் கடந்தாண்டு வெளியான ஜெய்பீம் படம் பல திரைப்பட விழாவில் விருதுகளை வென்ற நிலையில் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் சூர்யாவின் 42 படத்தின் பூஜை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவிற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது. 










சிறுத்தை, வீரம்,வேதாளம்,விவேகம்,விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநராக மாறியுள்ள சிவா தான் சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்கப் போகிறார். பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்நிலையில் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜை நடந்த அன்று இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தோடு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.