நடிகர் சூர்யா நடித்து வரும் 42வது படத்தின் டைட்டில் இன்று வெளியான நிலையில், அதற்கு என்ன அர்த்தம் என்பது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா கடைசியாக “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்தாண்டு பிப்ரவரியில் வெளியானது. இதனிடையே சூர்யா இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதற்கட்ட படப்பிடிப்பும் நடந்தது. ஆனால்  கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அப்படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். 


இதற்கிடையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்  சூர்யாவின்  அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்கள் மூலம் தமிழில் முன்னணி கமர்சியல் இயக்குநராக உருவெடுத்த சிவா இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கிட்டதட்ட 2 ஆண்டுகளாக இருவரும் இணையவுள்ளதாக பரவி வந்த தகவலுக்கு ஒரு முடிவு கிடைத்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 


தொடர்ந்து இந்த படத்தில் ஹீரோயினாக திஷா பதானி நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழில் அவர் எண்ட்ரீ கொடுக்கிறார்.  யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏற்கனவே 3டி தொழில்நுட்பத்தில்  10 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக மோஷன் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். 


இந்த படத்தின் படப்பிடிப்பு  கோவா, எண்ணூர் துறைமுகம், கேரளா உள்பட பல இடங்களில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு, புகழ்ச்சிகளுக்கும், இடியின் சத்தங்களுக்கும் நடுவே போர் வீரன் நுழைகிறான் என்ற கேப்ஷனோடு அறிவிப்பு வெளியானது. மேலும் அதில் படத்தின் டைட்டில் ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 9.05 மணிக்கு  வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் சூர்யா 42 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்துக்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் ட்விட்டரில் #Kanguva, #Suriya42 என்ற ஹேஸ்டேக்குகளில் ரசிகர்கள் படத்தின் டைட்டிலை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேசமயம் காலை 9.05 மணிக்கு  டைட்டில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, இன்றைய காலை நாளிதழ்களில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியிருந்தது. 


இதற்கிடையில் கங்குவா என்பதற்கு நெருப்பு சக்தி கொண்டவர் மற்றும் மிகவும் வீரம் கொண்டவர் என்று பொருள் என்ற ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் டைட்டில் வீடியோவும் மிகவும் ஆக்ரோஷமான போர் வீரனை பற்றி தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.