இரண்டு நடிகைகளுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தது குறித்து கேட்ட நபருக்கு சந்தீப் கிஷன் கடுமையாக பதிலளித்துள்ளார்.


சந்தீப் கிஷன்


’யாருடா மகேஷ்’ படத்தின் வழியாக தமிழ் திரையுலகில்  அறிமுகமானவர் நடிகர் சந்தீப் கிஷன். பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சந்தீப்புக்கு, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் ஒரு நல்ல ஓப்பனிங்காக அமைந்தது. இதனைத் தொடர்ந்து மாயவன் , கசடதபர, மைக்கேல்  உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் சந்தீப் நடித்திருந்தார். 


தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி இருக்கும் படம் ‘ஊரு பேரு பைரவகோனா’ . வர்ஷா பொல்லாமா, காவ்யா தாப்பர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வி.ஐ ஆனந்த இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இப்படம் வெளியான 10 நாட்களில் 25.11 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக படக்குழு தகல் வெளியிட்டுள்ளது.






டபுள் மீனிங்கா பேசாதீங்க



இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் நேற்று ஹைதராபாதில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் பலரது கேள்விகளுக்கு நடிகர் சந்தீப் கிஷன் பதிலளித்தார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் சந்தீப் கிஷனிடன் அவருடன் நடித்த சக நடிகைகளைப் பற்றிய ஆபாசமான கேள்வி ஒன்றை எழுப்பினார். “இந்தப் படத்தில் இரண்டு நடிகைகளுடனும் நீங்கள் அதை செய்திருக்கிறீர்கள். இதில் எந்த நடிகையுடன் அப்படி நடித்தது உங்களுக்கு பிடித்திருந்தது” என்று அந்த  நபர் இரட்டை அர்த்தத்தில் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் எர்ச்சலடைந்த சந்தீப் கிஷன் அதற்கு பதில் அளிக்காமல் தவிர்க்க முயற்சி செய்தார்.


தொடர்ந்து தனது கேள்வியை வற்புறுத்திய அந்த நபரிடம் “நான் இந்த கேள்விக்கு பதில் அளிக்க மாட்டேன். இரட்டை அர்த்தத்தில் கேள்வி கேட்காதீர்கள். உங்களுக்கு வேறு ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் பதில் தருகிறேன்” என்று சந்தீப் கிஷன்  கூறியுள்ளார். அதோடு நிற்காமல் அந்த நபர் மீண்டும் அதே கேள்வியை தொடர அதற்கு “ நான் இரண்டு நடிகைகளுடன் நடித்த அனுபவம் பற்றி கேட்கிறீர்களா. உங்களது கேள்வியை தெளிவாக கேளுங்கள்“ என்று கூறியுள்ளார் சந்தீப் கிஷன்