கேப்டன் மில்லர்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சந்தீப் கிஷன், ஷிவராஜ் குமார், பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கேப்டன் மில்லர் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ள நடிகர் சந்தீப் கிஷன் படம் குறித்தும் தனுஷுடன் நடித்த அனுபவம் பற்றியும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
தனுஷ் எனக்கு ஒரு மூத்த அண்ணன் மாதிரி..
தனுஷ் குறித்து பேசும்போது ”நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது யாரும் எதிர்பார்க்காதது, நான் நடிக்க வருகிறேன் என்று சொன்னபோது என்னுடைய நண்பர்கள் என்னைச் சுற்றி இருந்தவர்கள் யாரும் என்னை நம்பவில்லை. என்னை கேலி செய்திருக்கிறார்கள். ஆனால் சிறிய வயதில் இருந்தே எனக்கு பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. நான் எதை செய்தாலும் அதற்கான உழைப்பை செலுத்த தயாராக இருந்தேன். ஒரு நடிகராக தனுஷ் அண்ணாவை நான் பல நேரங்களில் என்னுடைய இன்ஸ்பிரேஷனாக பார்க்கிறேன் . செல்வராகவன் இயக்கி தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தைப் பார்த்து ஒரு நடிகனாக நான் எந்த மாதிரியான கதையை தேர்வு செய்ய வேண்டும் அப்போதுதான் நான் எப்படி தனித்துவமாக கவனிக்கப்படுவேன் என்று தெரிந்துகொண்டே.
எனக்கும் தனுஷுக்கு 3 வயது தான் வித்தியாசம். ஆனால் எப்போதும் நான் அவர் முன் கொஞ்சம் என்னுடைய இயல்புக்கு மாறாக தான் நடந்துகொள்வேன். அவர் முன்னாள் என்னால் சகஜமாக இருக்க முடியாது. நிறைய கற்றுக்கொள்ளும் ஆர்வமும் ஒரு அண்ணன் முன்னாள் இருக்கும் மரியாதையுமே எனக்கு அவரிடம் அதிகம் இருக்கும்” என்று கூறினார் சந்தீப் .
தனுஷுக்கு 7 மாஸ் காட்சிகள் இருக்கு
கேப்டன் மில்லர் படத்தைப் பற்றி பேசும்போது “ இந்த மாதிரியான ஒரு படத்தை எடுக்க பெரும்பாலும் யாரும் முன்வரமாட்டார்கள். இந்தப் படத்திற்காக மட்டும் 500 வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள், அவ்வளவு பேரை இந்தியாவில் எங்கிருந்து கொண்டு வருவது. இப்படி நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இந்தப் படத்தில் இருப்பதால் இந்த கதையை யாரும் அவ்வளவு எளிதாக படமாக எடுக்க தேர்வு செய்ய மாட்டார்கள். இதில் நடித்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மாஸான தருணங்கள் இருக்கின்றன. எனக்கு , ஷிவராஜ் குமார் , பிரியங்கா மோகன் எல்லாருக்கும் சில காட்சிகள் இருக்கின்றன. ஒரு போரைப் பற்றிய படம் என்றால் அதில் நிச்சயம் நிறைய மாஸான இடங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அந்த வகையில் தனுஷுக்கு இந்தப் படத்தில் மொத்தம் 7 மாஸான காட்சிகள் இருக்கின்றன” என்று அவர் கூறியுள்ளார்.