சினிமாவில் அப்பா விஜய்யை போல நிச்சயம் சாதிப்பாய் என ஜேசன் சஞ்சயை நடிகர் ஸ்ரீமன் வாழ்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் 1993 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தார். முதலில் உருவக்கேலி செய்யப்பட்ட அவர் பின்னாளி தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, கர்நாடகாவில் தனக்கென தனி ரசிகர்களை பெற்றுள்ள முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். இந்த 31 ஆண்டுகள் பயணத்தில் பல தோல்விகள், அவமானங்கள் என விஜய்யின் சினிமா பாதை சாதாரணமானது அல்ல.






அவர் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் விஜய்க்கு வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தார் என்ற விமர்சனம் ஒருபுறம் இன்றளவு வைக்கப்பட்டாலும், தயாரிப்பாளர், பாடகர் என விஜய் தனக்கென தனி பாதையையும் உருவாக்கி கொண்டார். தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி விட்டார். 68வது படத்தில் நடித்து வரும் விஜய், தனது 69வது படத்தோடு சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என்றும், மக்கள் பணியாற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளார். 


ஜேசன் சஞ்சய் எண்ட்ரீ


இதனிடையே விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் போக்கிரி மற்றும் வேட்டைக்காரன் படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்திருப்பார். இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் படம் இயக்கப்போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் ஓராண்டாகியும் படம் பற்றிய எந்த அப்டேட்டும் இல்லை. ஜேசன் வெளிநாட்டில் இயக்குநருக்கான படிப்பு படித்திருந்தாலும், அனுபவம் இல்லாத காரணத்தால் நடிக்க சினிமாவின் இளம் நடிகர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. நடிகர் கவின் மட்டும் ஜேசன் வைத்திருக்கும் கதை நன்றாக இருப்பதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் நடிகரும், விஜய்யின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீமன், தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் ஜேசன், மற்றும் விஜய்யின் புகைப்படத்தை வெளியிட்டு, “அப்பாவும்  உன் வயதில் நுழைந்தார். சஞ்சய் நன்கு பயிற்சி பெற்று தன்னை ட்யூன் செய்துகொண்டார். சீக்கிரம் அடித்து ஆடுவார், கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் அன்பே, ஓம் நமசிவாயம்” என தெரிவித்துள்ளார்.