எல்லாமே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தனுஷூக்கு இருப்பது தனக்கு பிரமிப்பை ஏற்படுத்துவதாக நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 


ரோஜாக் கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் (Srikanth). தொடர்ந்து தமிழில் ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, ஜூட், வர்ணஜாலம், போஸ், கனா கண்டேன், மெர்க்குரி பூக்கள், உயிர், பூ, நண்பன், சௌகார்பேட்டை, ரசிக்கும் சீமானே, நம்பியார், கண்ணை நம்பாதே என ஏகப்பட்ட படங்கள் தமிழில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக வலம் ஸ்ரீகாந்த் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். 






அப்போது அவரிடம் “சினிமாவில் யாரைப் பார்த்தாவது பொறாமைப்பட்டிருக்கிறீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நான் சக நடிகர்களைப் பார்த்து பொறாமைப்பட்டுள்ளேன். குறிப்பாக நடிகர் தனுஷை (Dhanush) சொல்லலாம். இருவரும் இணைந்து ஒரு படத்தில் வேலை செய்தோம். நடன அசைவுகளை டான்ஸ் மாஸ்டர் தான் கற்றுக் கொடுப்பார். ஆனால் செட்டில் பெண் பிரபலத்துக்கு எத்தனை முறை திரும்ப திரும்ப பாட்டு போட்டாலும் ஒரு அசைவு கூட மாறாமல் ஆடி காட்டினார்.


எனக்கு அதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. அவர் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் காதலித்திருப்பேன். அந்த மாதிரி மிகச்சிறந்த நடிகர். ஒரு கலைஞன் கிட்ட இத்தனை விஷயம் இருக்கா என நினைக்கும்போது பிரமிப்பாக இருந்தது. எல்லாமே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்குள் இருக்கிறது. அது எனக்கு நல்ல உத்வேகம் கொடுத்தது. நாங்களும் அதைக் கற்றுக் கொள்கிறோம்” என ஸ்ரீகாந்த் தெரிவித்திருந்தார். 


அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் படங்கள்


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக தனுஷ் திகழ்கிறார். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமைசாலியாக திகழ்கிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் ராயன், குபேரா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதில் ராயன் படம் தனுஷின் 50வது படமாகும். இந்தப் படத்தை பவர் பாண்டி படத்துக்கு பின் அவரே இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற படத்தையும் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.