‘பெட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஸ்ரீகாந்த், “இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரஸ்மீட் வைக்க வேண்டுமா என்கிற தயக்கம் என்னிடம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர், மக்கள் தொடர்பாளர் இருவரும் மிகுந்த நம்பிக்கை வைத்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள். ஆனால் இவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை ஏனென்றால் இந்த இரண்டு வருடமாக கொரோனாவால் எல்லாமே மாறிப்போயிருந்தது.


படம் துவங்கும் தேதியையும் முடிக்கும் தேதியையும் முன்கூட்டியே தீர்மானித்து விட்டாலே  தயாரிப்பாளர் தப்பித்து விடுவார்.


முதலில் டைட்டிலைக் கேட்டதுமே சற்று தயக்கமாகத்தான் இருந்தது.. கதையும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்புமோ என்கிற பயமும் இருந்தது.. சில பேர் சொல்லும்போது ஒன்றாகவும், படமாக்கும்போது வேறு ஒன்றாகவும் செய்வார்கள். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர் அதிலிருந்து பின்வாங்கவும் முடியாது. அப்படி செய்தால் வேறு சிலருடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து விடுவார்கள்..


சிம்புவின் தைரியம்


எல்லோருக்கும் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது.. ஹேட்ஸ் ஆப் சிம்பு.. ஏனென்றால் பல பேர் சிம்புவை சரியாகப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். யாரும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத நடிகர் சிம்பு என்று நான் நினைக்கிறேன். 




ஆனால் அவர் ஒரு அற்புதமான மனிதர்.. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு டோட்டலாக இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்து விடுவார். சிலர் வேறு மாதிரி கதையை குழப்பினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார்.. 


படங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கும்போது சில விஷயங்களில் நம் யோசனையை சொல்வோம்.. அது ஒரு நடிகர் என்று இல்லாமல் பார்வையாளரின் கண்ணோட்டத்திலும் இருக்கும். 


எல்லா இயக்குநர்களும் அவர்கள் மனதில் கதையை எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்களோ அப்படித்தான் எடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.. ஆனால் படம் வெளியான பிறகு உண்மையான வெற்றி பார்வையாளர்களிடம் இருந்து தானே கிடைக்கும்..? அதனால் ஹீரோக்கள் சொல்லும் சில விஷயங்களையும் ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை..


ஐடியா கொடுப்பது தவறில்லை


என்னைப் பொருத்தவரை ஐடியா கொடுப்பது தவறில்லை.. ஆனால் குறுக்கீடு செய்யக்கூடாது க்ளைமாக்ஸில் கூட எனக்கு சற்று கருத்து மாறுபாடு இருந்தது. இயக்குநரிடம் அதை மாற்றி விடலாமா எனக் கூறினேன்.. ஆனாலும் தான் இப்படித்தான் மனதில் உருவகப்படுத்தி வைத்திருப்பதாக அவர் சொன்னார்.. சரி என அவர் விருப்பத்திற்கு விட்டு விட்டேன்.. அவர் என்னிடம் என்ன சொன்னாரோ அதைக் கொஞ்சமும் மாற்றாமல் அவர் போக்கிலேயே எடுத்துவிட்டார்.. 


அதேசமயம் தி பெட் என பெயர் வைத்திருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் அழகான படமாக இது இருக்கும். இந்த டீசர் எல்லோரையும் கவரும் என்று நான் சொல்ல மாட்டேன்.. ஆனால் படம் சூப்பராக வந்திருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன்..


தவறை உணர்ந்தேன் 


இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுமே படத்திற்கான ஒளிப்பதிவாளரை நான் சிபாரிசு செய்யலாமா எனக் கேட்டேன்.. ஆனால் ஏற்கனவே கோகுலை ஒப்பந்தம் செய்து விட்டேன். அவர்தான் என் முதல் சாய்ஸ் என்று இயக்குநர் மணிபாரதி கூறினார்.


ஆனால் படப்பிடிப்பின்போதுதான், நான் என்னுடைய தவறை உணர்ந்தேன். ஒருவரை பற்றி எதுவுமே தெரியாமல் அவரது திறமையை எடைபோடுவது எவ்வளவு தவறு என்பதை கோகுல் எனக்கு உணர்த்தினார். அந்த அளவுக்கு அற்புதமாக காட்சிகளை படமாக்கியதுடன் என்னை மிகவும் அழகாக காட்டியுள்ளார். 


குளிரில் நடுங்கிய சிருஷ்டி


ஊட்டி குளிரில் குறைந்த அளவு ஆடையுடன் நடுங்கிக்கொண்டே சிரமப்பட்டு நடித்தார் சிருஷ்டி டாங்கே. ஆனால் இயக்குனரோ ஸ்வெட்டர் குல்லா என குளிருக்கு இதமாக அணிந்துகொண்டு மானிட்டருக்கு பின் ரொம்ப பாதுகாப்பாக அமர்ந்து கொண்டிருந்தார். ஏன், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வருவதுபோல கதை எழுத கூடாதா என்று கூட அவரிடம் கேட்டுவிட்டேன்.” என்று பேசினார். 




ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன்  ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும்,  நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர். இவர்களுடன்  ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா,ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.