ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ஸ்ரீகாந்த். இதைத்தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழில் முன்னணி நடிகராக முன்னேறினார். தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழிகளில் நடித்து வரும் இவர் நேற்று காலை போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், இதில் பல நடிகர்களும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
போதை பொருள் வந்தது எப்படி?
ஆப்பிரிக்க இளைஞர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 17ஆம் தேதி இரவு சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை நுங்கம்பாக்கம் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள்இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், இதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை (38) கைது செய்தனர்.
போலீஸ் அதிரடி விசாரணை
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை இளைஞருக்கு போதைப்பொருள் விநியோகித்த கானாவைச் சேர்ந்த ஜான் (38) என்பவரை ஓசூரில் கடந்த 18ஆம் தேதி கைது செய்தனர். அந்த நபரை சென்னை அழைத்து வந்து நடத்திய விசாரணையில், அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார் என்ற பட்டியலை கொடுத்தார். அந்த பட்டியலில் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார்.
ஸ்ரீகாந்த் கைது
இதனைத்தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் ஸ்ரீகாந்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது நான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என வாதம் செய்துள்ளார். பின்னர் அவரது ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்தபோது போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர். ஸ்ரீகாந்த் மட்டும் அல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
தவறை ஒப்புக்கொண்ட ஸ்ரீகாந்த்
கைது நடவடிக்கையை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் ஜாமீன் கோரியுள்ளார். அதில், போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்துவிட்டேன். எனது மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் , குடும்பத்தில் பல பிரச்னை உள்ளது. நான் வெளிநாடு செல்ல மாட்டேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்றும் கூறியுள்ளார்.