சென்னையில் சாப்பிட காசில்லாமல் தண்ணீரை குடித்து காலத்தை ஓட்டிய கதையை நடிகர் சூரி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் லைட் மேன், துணை நடிகர், காமெடி நடிகர் என சூரி கஷ்டப்பட்டு மிகப்பெரிய அளவில் முன்னேறி இருக்கிறார். தற்போது விடுதலை, கருடன் படம் மூலம் ஹீரோவாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். சூரி சினிமா ஆசையில் சென்னை வந்து இங்கு பார்க்காத வேலையே இல்லை. போஸ்டர் ஒட்டுவது, பெயிண்ட் அடிப்பது, சாக்கடை அள்ளுவது, ஆட்டோ ஓட்டுவது என ஏகப்பட்ட வேலைகளை செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் சூரி அடைந்த வளர்ச்சி என்பது அசுரத்தனமானது.


அவர் மதுரை மேலூர் அருகே ராஜாக்கூரில் பிரமாண்டமாக வீடு கட்டியுள்ளார். இந்த வளாகத்தில் தன்னுடன் பிறந்த 5 சகோதரர்களுடனும் ஒற்றுமையாக வாழ்த்து வருகிறார். இப்படியான நிலையில் சூரி தன் ஆரம்ப காலக்கட்டத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் பணிக்காக வந்து கஷ்டப்படும் பேச்சுலர் வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். அதில் தன்னால் மறக்க முடியாத நிகழ்வு ஒன்றை நேர்காணலில் பகிருந்திருந்தார். 


அதில், “ஒருநாள் நான் சென்னையில் இருக்கும்போது எங்க அம்மா போன் பண்ணினார்கள். நான் அப்போது உச்சக்கட்ட பசியில் இருந்தேன். கையில் பணம் இல்லாத நிலையில் குழாயில் தண்ணீர் குடித்து பசியாற்றி கொண்டிருந்தேன். எங்க அம்மா என்னிடம், “என்ன அப்பு நல்லாருக்கியா, என்ன பண்ற” என கேட்டார். நான் நல்லாருக்கேன்மா என சொல்லவும் என் குரலை கேட்டு ஏன் ஒருமாதிரி பேசுகிறாய் என கேட்டார். சாப்பிட்டியா என அடுத்த கேள்வி வந்தது. நான் சாப்பிட்டேன் என இங்கு நடந்ததை மறைத்து பதில் சொன்னதோடு, நீங்களும் சாப்பிட்டீங்களா? என கேட்டேன். அம்மா, வீட்டில் பிரியாணி சமைத்து கொண்டிருப்பதாக சொன்னார். மீண்டும் மீண்டும் ஏன் ஒரு மாதிரி பேசுகிறாய் என அம்மா என்னை விசாரித்துக் கொண்டே இருந்தார்.


ஒருகட்டத்தில் நான் அம்மாவிடம்,  ரூ.500 பணம் யாரிடமாவது கிடைக்குமா? என கேட்டேன். ஏன் என கேட்டதும், சாப்பிட பணமில்லை, குழாய் தண்ணீரை குடிச்சிட்டு உட்கார்ந்து இருக்கிறேன் என நான் சொன்னதும் எங்க அம்மா ஒரே அழுகை. நான் ஏன் அழுகுறன்னு கேட்டதும், நான் எவ்வளவு சொன்னேன், உங்களுக்கு இதெல்லாம் தேவையா? அங்க போய் கஷ்டப்படுற, வேண்டாம்டா வந்துருடான்னு சொன்னார். 


அப்போதெல்லாம் ஊரில் ஒரு கடையில் போன் இருக்கும். எங்கம்மா கதறி அழுதவுடன் அந்த கடைக்காரன் என்னாச்சு பதறி போய் கேட்டார். அம்மா, நடந்ததையெல்லாம் சொல்லி வருத்தப்பட்டார்” என சூரி கூறினார்.