மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் 14 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ள சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 


தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் , பாஜக ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த வைகோவின் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் அக்கட்சி சார்பில் வைகோவின் மகனான துரை வைகோ போட்டியிட்டார். அவரின் முதல் தேர்தல் களம் இதுவாகும். தனிச்சின்னத்தில் போட்டியிட்ட துரை வைகோவுக்கு இந்த தேர்தலில் தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. 


இப்படியான நிலையில் ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகியது. இதில் துரை வைகோ 3,13, 094 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை வீழ்த்தினார். இந்த நிலையில் 3ஆம் இடம் நாம் தமிழர் கட்சிக்கும், 4 ஆம் இடம் பாஜக சார்பில் களம் கண்ட அமமுக கட்சிக்கும் கிடைத்தது. திருச்சி தொகுதியில் மொத்தம் 53 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும் 14,796 வாக்குகள் பெற்றிருந்தது அனைவருக்குமே பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. 


பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமலயா தொண்டு நிறுவன இயக்குநர் தாமோதரன் கூட 5 ஆயிரம் வாக்குகள் பெற, பிற சுயேட்சை வேட்பாளர்கள் 2 ஆயிரம் வாக்குகள் கூட பெறவில்லை. அப்படியிருக்கையில் சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மட்டும் 14,796 வாக்குகள் பெற்றார் என்ற கேள்வி எழுந்தது. இந்த தேர்தலில் செல்வராஜூக்கு பிஸ்கட் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் ஒவ்வொரு சுற்றிலும் 700 வாக்குகள் பெற்றிருந்தார். இத்தனைக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் செல்வராஜ் வேட்புமனு தாக்கல் செய்ததோடு சரி, பிரச்சாரம் கூட செய்யவில்லை எனவும் சொல்லப்படுகிறது.


அப்படியிருக்கையில் மக்கள் மத்தியில் இவருக்கு எப்படி இவ்வளவு செல்வாக்கு என பலரும் குழம்பி போயினர். செல்வராஜூக்கு ஒதுக்கப்பட்ட பிஸ்கட் சின்னம் செவ்வக வடிவில் அச்சிடப்பட்ட நிலையில், துரை வைகோவுக்கு ஒதுக்கப்பட்ட தீப்பெட்டி சின்னமும் பார்ப்பதற்கு அதேபோல் இருந்ததால், பலரும் தீப்பெட்டி என நினைத்து பிஸ்கட் சின்னத்துக்கு வாக்களித்துள்ளனர் என கூறப்படுகிறது. . இந்த சம்பவம் பெரும் வியப்பை திருச்சி தொகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் துரை, கருப்பையா போன்ற பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்களை கொண்ட சுயேட்சை வேட்பாளர்கள் பெரிய அளவில் வாக்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.