கருடன்


விடுதலை படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடித்துள்ள கருடன் கடந்த மே 31ஆம் தேதி வெளியானது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், வடிவுக்கரசி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விடுதலை படம் சூரிக்கு நாயகனாக நல்ல ஒரு ஓப்பனிங்காக அமைந்தாலும், சூரி முதல்முறையாக ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கிய படம் கருடன். விறுவிறுப்பான ஒரு கிராமத்து சப்ஜெக்ட், சூரியின் எதார்த்தமான நடிப்பு, துருத்திக் கொண்டு தெரியாத ஆக்‌ஷன் காட்சிகள், யுவனின் பின்னணி இசை என ஒரு பக்கா ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக வெற்றிபெற்றுள்ளது கருடன் படம்.


கடந்த 15 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்து இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது கருடன். கருடன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இன்று சென்னையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி இப்படத்தில் வேலை செய்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 


வெற்றிமாறன் பற்றி நடிகர் சூரி






நிகழ்ச்சியில் பேசிய சூரி “ஒரு குழந்தையை பத்து மாதம் சுமந்து, கடைசியில் அதை சரியாக டெலிவரி செய்வது தான் முக்கியம். அதே போல தான் ஒரு படத்தின் ஃபைனல் மிக்ஸ். ஒரு படத்தின் ஃபைனல் மிக்ஸில் எப்படிப்பட்ட நல்ல படமாக இருந்தாலும் அதை ஒன்றும் இல்லாமல் மாற்றிட முடியும். அந்த வகையில் உதயகுமார் இந்தப் படத்தின் ஃபைனல் மிக்ஸை அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார்.


யுவன் ஷங்கர் ராஜா படத்தின் ஃபைனல் மிக்ஸை பார்த்துவிட்டு ரொம்ப பாராட்டினார். அதே போல் இந்தப் படத்தின் டப்பிங் விஷ்ணு தம்பியின் மேற்பார்வையில் நடந்தது. விடுதலை படத்திலும் விஷ்ணு வேலை செய்தார். விடுதலை படத்தில் உங்களைப் பார்க்க எனக்கு பாவமாக இருந்தது. வெற்றிமாறன் சார் படத்தில் ஒருவர் ஒருமுறை வேலை பார்த்துவிட்டார் என்றால், அவரை இந்த உலகத்தில் எந்த மூலையில் வேலை செய்ய சொன்னாலும் அவர் பிழைத்துக் கொள்வார். சூப்பர் என்று அவருக்கு சர்டிஃபிகேட் கொடுத்து அனுப்பிவிடலாம். படம் வெளியாவதற்கு முந்தைய நாள் ஒரு சில சிக்கல் ஏற்பட்டது. அப்போது உதயசங்கர் சார் செய்த உதவியை நான் எப்போதும் மறக்கவே மாட்டேன்.” என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.