மாநாடு படத்தை முடித்த கையோடு தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. படத்தை இயக்குநர் ராம் இயக்க போவதாகவும், கதாநாயகனாக நிவின் பாலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதையும் தெரிவித்திருந்தார். அதன்படி, படம் தனுஷ்கோடி பகுதிகளில் தொடங்கியது. இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அப்டேட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “ நண்பர்களுக்கு வணக்கம். மாநாடு திரைப்படத்தைத் தொடர்ந்து, மக்களின் இயக்குநர் ராம் இயக்கத்தில் மலையாளம், தமிழ் இரண்டிலும் இளையோர்களின் மனதைக் கொள்ளையடித்த நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். 


படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் உங்கள் அன்பினாலும் ஆசிகளாலும் தொடங்கியுள்ளோம். விஹவுஸ் புரொடக்ஷன்ஸின் ஏழாவது தயாரிப்பாக உருவாகிறது. யுவனின் இசை. ஏகாம்பரம் ஒளிப்பதிவு. உமேஷ் ஜே குமார் கலை. மக்கள் தொடர்பு A. ஜான்.பரபரப்பான படப்பிடிப்பில் படம் நகரும். இப்படத்தையும் உங்கள் மனதுக்கு நெருக்கமான படமாக விரைவில் கொண்டு வருவோம். உடன் நிற்கும் அனைவருக்கும் நன்றிகள்” என படத்தின் அனைத்து விவரங்களையும் வெளியிட்டிருந்தார். 


 






இந்நிலையில் இப்படத்தின் நடிகர் சூரியும் இணைந்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட சூரி, ''இன்று இனியதொரு தொடக்கம். இயக்குனர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலி யுடன் முதல்முறையாக 'பயணிப்பதில்' பெரு மகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி'' என பதிவிட்டுள்ளார். இது  தொடர்பான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.


ராம் இயக்கத்தில் உருவாகி வரும்  production #7  படம் தமிழ் மற்றும் மலையாளம் என பைலிங்குவலாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. பேரன்பு படத்திற்கு மலையாள ரசிகர்கள் கொடுத்த வரவேற்பே இந்த முடிவுக்கு காரணமாம்.  நிவின் பாலியின் நேரம் படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு நேரடியாக ‘ரிச்சி’ என்னும் தமிழ் படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் ராமுடன் அவர் இணைந்திருப்பதால் நிச்சயம்  நிவினுக்கு இந்த படம் கைக்கொடுக்கும் என நம்பப்படுகிறது