தான் பள்ளியில் படித்த போது எப்படி தேர்ச்சி பெற்றேன் என நடிகர் சூரி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் வேடிக்கையாக தெரிவித்துள்ளார். 


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் பேசிய அவர்,உங்களை எல்லாம் வாத்தியார் தான் தேர்ச்சி பெற வைத்திருப்பார்கள். ஆனால் என்னை என்னுடைய அப்பா தான் தேர்ச்சி பெற வைத்தார். நான் 6 ஆம் வகுப்பு படிக்க மதுரை நகருக்குள் வர வேண்டியிருந்தது. படிப்பை  முடிக்கும் போது, எங்க அப்பா பள்ளிக்கு வந்து ஆசிரியரை சந்தித்தார்.  


குட் மார்னிங் சார். மை நேம் இஸ்  ஆர்.முத்துசாமி, மை ஃபாதர் நேம் இஸ் ராமசாமி, மை சன்ஸ் ராம் அண்ட் லட்சுமணன், தே ஆர் ட்வின்ஸ்.. ராம் கலெக்டர், லட்சுமணன் இஞ்ஜினியர் ஆகணும் என ஆங்கிலத்தில் பேசினார். மேலும் அதுக்கு நீங்கள் தான் எப்படியாவது வழி செய்ய வேண்டும் என சொன்னார். 
 
மேலும் ஒரு அப்பாவா நான் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். இந்தாங்க இதுல ஒன்றரை கிலோ மட்டன், ஒன்றரை கிலோ சிக்கன் இருக்கு. எப்போனாலும் கூப்பிடுங்க நான் வருவேன் என ஆங்கிலத்திலேயே சொன்னார். அவ்வளவு தான் நான் 6 ஆம் வகுப்பு பாஸ் என சூரி சொன்னார். இதேபோல் தான் 7 ஆம் வகுப்பு4க்கும் நடந்தது. அதன்பின் 8 ஆம்  வகுப்பு பாஸ் பண்ண என்னை வழக்கம் போல எங்கப்பா கூட்டிட்டு போனார்.


வழக்கம்போல குட்மார்னிங் டீச்சர் என ஆரம்பிக்கும் போதே நான் நிப்பாட்டுங்க அப்பா என்றேன். ஆனால் அவர் என்னை சும்மா இருடா என்று சொல்லிட்டு அதே வசனத்தை பேசிட்டு இந்த பக்கம் ஒன்றரை கிலோ சிக்கன் இருக்கு என சொல்லும் போதே அந்த ஆசிரியர் எங்களை மைதானத்துல ஓட விட்டார். காரணம் அந்த ஆசிரியர் சுத்த சைவம் என பிளாஸ்பேக் சொல்ல அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. 


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் 


1997 ஆம் ஆண்டு முதல் பல படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த நடிகர் சூரி, 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் “பரோட்டா” சூரியாக பிரபலமானார். தொடர்ந்து நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து புகழ் பெற்றார். தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வரும் சூரி, தற்போது வெற்றிமாறன் இயக்கி விரைவில் வெளியாகவுள்ள “விடுதலை” படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.