உலகம் முழுவதும் சிவராத்திரி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாலயங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா சேவா சபா மற்றும் யுகாதி நண்பர்கள் குழுவினர் இணைந்து 7வது ஆண்டாக மகா சிவராத்திரி விழாவை கொண்டாடும் விதமாக தனியார் திருமண மண்டபத்தில் 50 பெண்கள் ஒன்றிணைந்து ஒரே இரவில் 3 ஆயிரம் தேங்காய்களை கொண்டு மிக பிரம்மாண்டமான சிவலிங்கத்தை வடிவமைத்தனர். இந்த சிவலிங்கத்தை பொதுமக்கள் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தும் செல்ஃபி எடுத்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நாள் இரவில் 3000 தேங்காய்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட சிவலிங்கம் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தது.
இதேபோன்று, சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 13 அடியில் ஒரு லட்சத்து 50,008 ருத்ராட்சங்களை கொண்டு சிவன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. வாசவி கிளப் சேலம் ஸ்மார்ட் பாய்ஸ் மற்றும் ஆரிய வைசிய சமாஜம் இணைந்து கடந்த மூன்று நாட்களாக ருத்ராட்சத்தில் சிவன் சிலையினை வடிவமைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிவனை காண அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சிவன் சிலையானது அடுத்த ஐந்து நாட்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து வாசவி கிளப் சேலம் ஸ்மார்ட் பாய்ஸ் தலைவர் சுரேஷ் குப்தா கூறுகையில், “ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று புதிய உலக சாதனை முயற்சி செய்து வருகிறோம். அதன்படி இந்த ஆண்டு 13 அடியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து எட்டு ருத்ராட்சங்களை கொண்டு சிவன் சிலை அமைத்துள்ளோம். உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டதாக கூறினார். இதேபோன்று கடந்த ஆண்டு சந்தனங்களை கொண்டு ஒரு லட்சத்து எட்டு சிவலிங்கங்களை உருவாக்கி உலக சாதனை படைத்தோம். அதேபோன்று இந்த ஆண்டும் வாசவி கிளப் சேலம் ஸ்மார்ட் பாய்ஸ் நிர்வாகிகளை கொண்டு இந்த புதிய உலக சாதனை முயற்சி செய்துள்ளதாக கூறினார். அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்த ருத்ராட்ச சிவன் மக்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். எனவே அனைவரும் கோவிலுக்கு வந்து சிவன் அருள் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.
இதுபோன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவாலங்களில் சிவனுக்கு நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இரவு முழுவதும் சிவன் பக்தர்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகளை கண்டு களித்து வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று மாலை தொடங்கி சிவராத்திரி பூஜை நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி அன்று சிவபெருமானைக் காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.