தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சூரியின் வாழ்க்கையை சுமதி என்ற பெண் மாற்றிய சம்பவம் பற்றி காணலாம். 


சினிமாவில் வேலை பார்த்தால் தினமும் ரூ.500 சம்பளம், இருவேளை சாப்பாட்டுடன் கிடைக்கும் என்பதால் சென்னைக்கு வந்தவர் தான் சூரி. அப்படி வந்த அவர் ஏராளமான படங்களில் கூட்டத்தில் ஒருவன் ஆக வந்து போயுள்ளார். அப்படி சூரி முதன்முதலில் நடித்த படம் “மறுமலர்ச்சி”. அந்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை பற்றி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 


அதில், “சென்னைக்கு வந்ததும் மறுமலர்ச்சி தான் என்னுடைய முதல் படம். திருவண்ணாமலை தான் ஷூட்டிங் ஸ்பாட்.  சினிமா எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது உதவி இயக்குநர் ஒருவர் மூலமா துணை நடிகர்கள் ஏவிஎம் நிறுவனத்துக்கு எதிர்ல தேர்வு செய்வாங்க. அங்க போய் பாருங்க என சொன்னார். சரின்னு போய் பார்த்தால் மிகப்பெரிய கூட்டம் நிற்குது. அங்க மறுமலர்ச்சி மார்க்கெட் சீன், கூட்டம் வேணும் என பேசிக்கொள்வார்கள். அந்த ஏஜெண்ட் ஆள் தேர்வு செய்து கொண்டிருக்கும்போது நானும் வர்றேன் அண்ணன் என முன்னாடி போய் கையை தூக்கிக்கொண்டு நின்றேன். 


நீ யாருப்பா என அவர் கேட்டார். நான் இப்பதான் புதுசா வந்துருக்கேன் என சொன்னேன். சேர்க்கவே இல்லை. அப்போது துணை நடிகர்கள் கூட்டத்தில் சுமதி என்ற அக்கா வந்திருந்தார். அவர் என்னிடம் எந்த ஊரு உள்ளிட்ட விஷயங்களை விசாரித்தார். பின்னர் அந்த ஏஜெண்ட்டிடம் சென்று நல்ல பசங்களாக இருக்காங்க. கூட்டிட்டு போவோம் என பரிந்துரை செய்தார். என்னுடம் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக இருந்து பின்னாளில் 3 படங்கள் இயக்கிய வெற்றிவேலும் இருந்தார். நாங்கள் 2 பேரும் அந்த படத்தில் நடித்தோம். 


வடபழனி ராம் தியேட்டருக்கு எதிரே தான் என்னுடைய ரூம் இருந்தது. ஓடிப்போய் துணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வண்டியில் ஏறிக்கொண்டு ஷூட்டிங் சென்றோம். எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டை பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. அந்த படத்தின் ஹீரோவான மம்முட்டியை பார்க்க காத்திருக்கேன். துணை நடிகர்களை எல்லாம் ஒரு இடத்தில் நிற்க சொன்னார்கள். 


ஆனால் நான் ஓடி வந்து கார் வரும் பாதையில் நின்று கொண்டிருந்தேன். என்னை சொல் பேச்சு கேட்க மாட்டியா என மிரட்டினார்கள். மன்சூர் அலிகான் என்மீது கையை வைத்து தள்ளி விட்டும் செல்லும் காட்சியை நான் திரையில் தேட ரொம்ப பாடு பட்டேன்" என சூரி கூறியுள்ளார்.