நாளை மறுநாள் 78ஆவது சுதந்திரம் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதையடுத்து, வார இறுதி என்பதால் தொடர் விடுமுறை தொடங்க உள்ளது. இதன் காரணமாக, தலைநகர் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் மக்கள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.


வெளியூர் செல்லும் மக்களுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கம்: எனவே, கூடுதல் பயணிகளின் தேவையை கருதி தினசரியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.


திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்னையில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நாளை (புதன்கிழமை) 470 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வரும் 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 17ஆம் தேதி (சனிக்கிழமை) 365 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


அதேபோல, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து நாளை 70 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வரும் 16ஆம் தேதி மற்றும் 17ம் தேதி 65 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


சுதந்திர தின சிறப்பு ரயில்கள்: அதோடு, சென்னையில் மாதவரத்திலிருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ரயில்சேவையை பொறுத்தவரையில், செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இன்று (13ஆம் தேதி) மற்றும் 18ஆம் தேதிகளில் திருநெல்வேலியிலிருந்தும், நாளை 14ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதிகளில் செங்கல்பட்டிலிருந்தும் சுதந்திர தின சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 


இந்த ரயில்கள் மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.