கொட்டுக்காளி


சூரி நடித்து பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மலையாள நடிகை அனா பென் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார்.  இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது .


அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் ரெடி


நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் “ என்னுடைய நண்பர் அருண் விஸ்வா எனக்கு கூழாங்கல் படத்தை காட்டினார். நான் நிறைய உலக சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் நிறைய உலக சினிமாக்கள் எல்லாம் பார்த்தது இல்லை. அதனால் எனக்கு அந்த படத்தை பார்த்து புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பின் கூழாங்கல் படத்திற்கு ராட்டர்டாம் விருது கிடைத்திருப்பதாக சொன்னார்கள். எனக்கு அந்த விருது பற்றி எல்லாம் தெரியாது. அறிமுக இயக்குநர்களுக்கு இந்த விருது வழங்கப் படுவதாகவும் இந்த விருதினை கிறிஸ்டோஃபர் நோலன் வாங்கியிருப்பதாகவும் அருண் சொன்னார். நான் வினோத் ராஜை பார்த்து ப்ரதர் நீங்க எந்த ஊரு என்று கேட்டேன். அவன் மதுரை என்றுசொன்னார். எனக்கு சிலிர்த்துவிட்டது, மதுரையில் இருந்து ஒருவன் இவ்வளவு பெரிய விருதை வாங்கி இருக்கிறாரே அதை ஏன் யாரும் கொண்டாடவில்லை என்று கேட்டேன். அப்போது தான் நான் அருணிடம் சொன்னேன். வினோத்ராஜ் இயக்கும் அடுத்த படத்தை நான் தயாரிக்கிறேன் என்று. அவர் என்ன கதை வைத்திருக்கிறார் என்று எல்லான் எனக்கு தெரியாது ஆனால் இப்படியான ஒரு மனிதனை கொண்டாடுவதற்காக மட்டுமே தான் நான் இந்த படத்தை தயாரித்தேன். அப்படி தொடங்கிய படம்தான் கொட்டுக்காளி.


படத்தின் கதை எல்லாம் நான் கேட்கவில்லை. உங்களுக்கு என்ன எடுக்க வேண்டும் அதற்கான பட்ஜெட் ரெடி பண்ணி கொண்டு வாங்க. இங்கு நிறைய இயக்குநர்கள் ஏன் தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் நல்ல படங்கள் வரவேண்டும் என்றால் அதற்கான இயக்குநர்கள் வரும்போது அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து ஆதரிக்க வேண்டும். இந்த மாதிரியான ஒரு இயக்குநரை நான் கொண்டாட நினைத்தேன். இங்கு வந்த இயக்குநர்கள் பேசியிருப்பதைப் பார்த்து அந்த கொண்டாட்டம் தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். இந்த படம் வெற்றிபெற்று லாபம் வந்தால் அந்த லாபத்தில் ஒரு பங்கை நான் வினோத்ராஜின் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் கொடுப்பேன். இதே மாதிரி இன்னும் சிலர் இருந்தால் அவர்களையும் கண்டுபிடித்து ஆதரிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.