தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு மூளையில் ஓரமாக தெரியும் ஒரு முகமாக இருந்த நடிகர் சூரி மெல்ல மெல்ல ஒரு காமெடி நடிகனாக முகம் தெரிய ஆரம்பித்தார். அந்த வகையில் 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரானார். படிப்படியாக பல இன்னல்கள், கஷ்டங்களை கடந்து முன்னேறி இன்று ஹீரோ அந்தஸ்தை எட்டியுள்ளார். 


இது வரையில் ஒரு காமெடி நடிகனாக, குணச்சித்திர நடிகனாகவே பார்க்கப்பட்ட சூரியை வித்தியாசமாக பார்த்தது வெற்றிமாறன் தான். அவரின் இயக்கத்தில் வெளியான 'விடுதலை' படத்தின் மூலம் ஹீரோவானார். யாரும் எதிர்பார்க்காத ஒரு சூரியை விடுதலை படத்தில் பார்த்த பிறகு அனைவரின் கண்களும் விரியும் அளவுக்கு அவரின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. அதை தொடர்ந்து 'கொட்டுகாளி' படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். சர்வதேச அளவில் அவரின் படங்கள் திரையிடப்படும் அளவுக்கு தன்னுடைய விடாமுயற்சியால் வெற்றி பெற்றுள்ளார் நடிகர் சூரி. 


 




சமீபத்தில் நடிகர் சூரி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தன்னுடைய அப்பா அம்மாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரு படத்தை எடுக்க வேண்டும் என தன்னுடைய விருப்பம் குறித்து தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில் "என்னுடைய அப்பா அம்மாவுக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். அவர்களின் வாழ்க்கையை ஒரு படமாக எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்கு தேவையான கதை ஏற்கனவே தயாராக இருக்கிறது. இந்த கதையை நான் பல இயக்குநர்களிடம் கூறியுள்ளேன். யார் இதை படமா எடுக்க தயாராக இருந்தாலும் ஒகே தான். வெற்றிமாறனிடம் கூட மூன்று மணி நேரம் உட்கார்ந்து சொன்னேன். இதுவரையில் அவர் இப்படி உட்கார்ந்து கதையை கேட்டு இருப்பாரா என எனக்கு தெரியவில்லை" என தெரிவித்து இருந்தார் நடிகர் சூரி.


மதுரை மாவட்டம் ராஜாக்கூர் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மற்றும் சேங்கையரசி தம்பதியினருக்கு ஆறு மகன்களின் ஒருவராக பிறந்தவர் தான் நடிகர் சூரி. சூரியின் தந்தை மிகவும் நகைச்சுவையாக பேச கூடியவர். அவரை போலவே சூரிக்கும் சிறு வயது முதலே காமெடி சென்ஸ் அதிகம். அதுவே அவருக்கு நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தை தூண்டியது. அப்படி சென்னைக்கு வந்து பல போராட்டங்களுக்கு பிறகு கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகளை பெற்று மெல்ல மெல்ல தனது அந்தஸ்தை உயர்த்தி கொண்டு இன்று ஜெயித்து காட்டியுள்ளார். அதற்கு ஏற்றாற்போல் தன்னுடைய நடை உடைகளை மாற்றி கொண்டதுடன் தோற்றத்தையும் கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டின் மூலம் பராமரித்து வருகிறார். முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை.