நந்தமுரி பாலகிருஷ்ணா ஒரு நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை தள்ளி விட்ட வீடியோ இணையத்தில் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. 


தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 63 வயதிலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார். திரையில் தன் சக்திக்கு மீறிய காட்சிகளில் நடித்து ரசிகர்களால் ட்ரோல் செய்யப்படுகிறார். அதேசமயம் பொது நிகழ்ச்சிகளிலும் எதைப் பற்றியும் யோசிக்காமல் பாலகிருஷ்ணா நடந்து கொள்ளும் விதம் சில நேரங்களில் கடும் சர்ச்சைகளை கிளப்பும்.






தெலுங்கில் விஷ்வக் சென், அஞ்சலி, நேஹா ஷெட்டி  உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி” படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நந்தமுரி பாலகிருஷ்ணா பங்கேற்றார். நிகழ்ச்சியில் மேடையேறிய பாலகிருஷ்ணாவுக்கு அருகில் நேஹா ஷெட்டியும், அதனைத் தொடர்ந்து அஞ்சலியும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அஞ்சலியை சற்று நகர்ந்து நிற்குமாறு சைகை செய்தார். இரண்டு முறை சொல்லியும் அஞ்சலி சில அடிகள் மட்டுமே நகர்ந்தார். இதனால் கடுப்பான பாலகிருஷ்ணா அவரை பிடித்து தள்ளி விட்டார். 


இதனை சற்றும் எதிர்பாராத அஞ்சலி சிரித்து நிலைமையை சமாளித்தார். அங்கிருந்த ரசிகர்கள் பாலகிருஷ்ணாவில் செயலுக்கு கூச்சலிட்டனர். இந்த நிகழ்ச்சியின் வீடியோ இணையத்தில் கடும் வைரலானது. இணையவாசிகள் பலரும் பாலகிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்துள்ளனர். அவர் பெண்களை அவமரியாதை செய்வதாக கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் பாலகிருஷ்ணா மேடைக்கு கீழே அமர்ந்திருக்கும் போது இருக்கைக்கு அருகே ஒரு தண்ணீர் பாட்டிலும், மற்றொரு பாட்டிலில் சற்று மாறுபட்ட கலரில் ஏதோ ஒன்றும் இருந்தது. இதனைப் பார்த்த பலரும் அது என்ன மதுவா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.






ஏற்கனவே பாலகிருஷ்ணா நிகழ்ச்சி ஒன்றில் தனது ரசிகருடன் போட்டோ எடுப்பார்.அப்போது அந்த ரசிகரின் குழந்தை தூங்கி கொண்டிருக்கும். அந்த குழந்தையை எழுப்புகிறேன் என்ற பெயரில் அடித்து எழுப்பி போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்லுவார் என்பது குறிப்பிடத்தக்கது.